'டேக் தட் பிளே பாய்" (Tag that playboy) என்று இன்று சமூகவலைத்தளங்களில் நாம் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால் இந்த வார்த்தைக்கு உண்மையான சொந்தக்காரர் ஹுயூக் ஹெஃப்னர். இவர்தான் 20ஆம் நூற்றாண்டில் பல இளைஞர்களின் ஹீரோவாக இருந்தார், ஏன் கடவுளாக கூடத் தெரிந்தார். என்ன இப்படியெல்லாம் சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? 90ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸிடம் கேட்டுப்பாருங்கள் தெரியும். இவர் வேறு யாருமில்லை 'பிளே பாய்' என்ற மாத இதழின் நிறுவனர்தான். ஹுயூக் ஹெஃப்னரின் 92வது பிறந்தநாள் இன்று.
ஹுயூக் ஹெஃப்னர், ஏப்ரல் 9ஆம் தேதி 1926 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தார். இவரின் பெற்றோர் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள். இவரும் 1944ஆம் ஆண்டு முதல் 1946 வரை இராணுவ பத்திரிகையில் எழுத்தாளராக பணியாற்றினார். 1949ஆம் ஆண்டு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் படைப்பெழுத்து கல்வியில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார். பின்னர் 'எஸ்கொயர்' (Esquire) என்னும் இதழில் பணியில் இணைந்து அங்கு 5 டாலர் சம்பளம் உயர்வு தரவில்லை என்றவுடன் அங்கிருந்து வெளியேறினார்.
1953ஆம் ஆண்டு 600 டாலர்கள் முதலீட்டிலும் மேலும் 45 பேரை பங்குதாரராக சேர்த்துக் கொண்டு அவர்களிடமிருந்து 8000 டாலர்களை பெற்று 'பிளே பாய்' இதழை ஆரம்பித்தார். பிளே பாய் வெளியிட்ட முதல் பிரதி டிசம்பர் மாதம் 1953 ஆண்டில் மர்லின் மன்ரோவின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி, 'முதல் முறையாக மர்லின் மன்றோவின் நிர்வாணப் படம்' என்ற விளம்பரத்தோடு வந்தது. ஆனால், அந்தப் படம் பிளே பாய் இதழுக்காக எடுக்கப்பட்டது அல்ல. வேறொரு காலெண்டர் கம்பெனியில் இருந்து நல்ல விலை கொடுத்து வாங்கினார் ஹெஃப்னர். இந்த இதழ் ஐம்பதாயிரம் பிரதிகளைத் தாண்டி விற்றது. 1970 ஆண்டுகளில் இதன் விற்பனை ஏழு மில்லியனை தாண்டியது. அமெரிக்க இளைஞர்களை மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்த இளைஞர்களையும் தன் கவர்ச்சியான அட்டைப் படங்களால் கட்டிப்போட்டிருந்தது 'பிளே பாய்'.
'பிளே பாய்' இதழின் அட்டைப் படத்தில் நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் போஸ் கொடுப்பதை தங்களின் பெருமையாகவே பல மாடல்களும், நடிகைளும் நினைத்தனர். அந்த அளவுக்குப் பரவியிருந்தது 'பிளே பாய்' இதழின் புகழ். ஹுயூக் ஹெஃப்னர், தன் நிறுவனத்தின் பெயரைப் போல தன் வாழ்விலும் பிளே பாயாக வாழ்ந்தவர். மூன்று திருமணங்கள் செய்து நான்கு குழந்தைகளைப் பெற்றார். அதில் முரட்டு சிங்கிள் இளைஞர்களையெல்லாம் கொதிக்க வைக்கும் விஷயம், இவருக்கும் இவரது மூன்றாவது மனைவிக்கும் உள்ள வயது வித்தியாசம் 60 என்பது. ஆம், கிரிஸ்டல் எஃப்னர் என்ற 20 வயது மாடலை திருமணம் செய்துக்கொண்டார் . இவர் திருமணம் செய்தது மட்டும் தான் மூன்று. ஆனால், "பிளே பாய் மேன்ஷன்" என்ற மாளிகையைக் கட்டி தனது கேர்ள் ஃப்ரெண்ட்ஸுடன் தன் வாழ்க்கையையே ஒரு பார்ட்டியாக வாழ்ந்தார் ஹெஃப்னர்.
பிளே பாய் பத்திரிகை இருபதுக்கும் மேலான நாடுகளில் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகளை விற்றது. ஆனால் சில ஆண்டுகளாக அதன் விற்பனை ஏழு லட்சம் மட்டும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து இணையம் வந்த பின் தங்கள் மதிப்பு குறைந்ததாக உணர்ந்த பிளே பாய் நிறுவனம், தனது அட்டைப்படங்களில் நிர்வாண புகைப்படங்கள் போடுவதை நிறுத்தவுள்ளதாக 2015ஆம் ஆண்டு அறிவித்தது. இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்தது. பின்னர் 2017ஆம் ஆண்டு தன் வாசகர்களை மீண்டும் இழுக்க முடிவு செய்து மீண்டும் நிர்வாண அட்டைப்படங்கள் வரும் என்று அறிவித்தது. அறிவித்த அதே ஆண்டு தனது 91வது வயதில் செப்டம்பர் 21ஆம் தேதி "த ரியல் பிளே பாய்" ஹுயூக் ஹெஃப்னர் கலிபோர்னியாவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தனி மனித ஒழுக்கத்தின் காரணிகள், வரையறைகள் என்பது கலாச்சாரங்கள், தேசங்கள் இடையே மாறுபடுகிறது. அவர் வாழ்ந்த தேசத்தில் அவரை விமர்சித்தவர்கள் இல்லை, பொறாமைப் பட்டவர்கள் லட்சக்கணக்கில் உண்டு. இன்று நண்பர்களால் விளையாட்டாக ஃபேஸ்புக்கில் டேக் (tag) செய்யப்படும் பிளே பாய்கள் ஒரு நிமிடம் அவரை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.