செரிமான கோளாறுக்கான காரணங்கள் குறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்
நெஞ்சு எரிச்சல் என்பது பலருக்கும் நிகழக்கூடிய ஒன்று. நேரம் தவறி சாப்பிடுவது இதற்கான முக்கியமான காரணம். நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, அதிகமான அளவில் உண்ணுவது, இரவு நேரங்களில் மிகத் தாமதமாக சாப்பிடுவது, சாப்பிட்ட உடனேயே படுப்பது, ஆல்கஹால் எடுத்துக்கொள்வது போன்ற பல்வேறு காரணங்களால் இது ஏற்படும். முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இந்தப் பிரச்சனை, இப்போது இளைஞர்களுக்கும் வருகிறது. இதற்கான காரணம் நம்முடைய உணவு முறைதான்.
ஆரோக்கியமான உணவு முறை என்பதையே நாம் மறந்துவிட்டோம். எண்ணெய் நிறைந்த உணவுகள், காரமான உணவுகள், துரித உணவுகள் என்று இவற்றைத் தான் நாம் அதிகமாக உண்ணுகிறோம். இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதும் தவறு. உணவில் எதையுமே அதிகமாக எடுத்துக்கொண்டால் பிரச்சனை தான். உடலுக்கென்று ஒரு கடிகாரம் இருக்கிறது. அதை நாம் மாற்றாமல், செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டும்.
நடைமுறையை நாம் மாற்றும்போது, உணவு வயிற்றுக்குள் செல்லாமல் மேலே வரும். இதனால் ஏப்பம் உள்ளிட்டவை ஏற்படும். இதனால் இதயத்துக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் அதிகமான எண்ணெய் உணவுகளை நாம் பயன்படுத்தினால், இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உணவுக்குழாய் தான் முதலில் பாதிக்கப்படும். இது கேன்சர் வரை கூட கொண்டுபோய் விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தவறு.
மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். குப்பை போல் வயிற்றுக்குள் அனைத்தையும் நாம் அடைக்கக் கூடாது. ஆரோக்கியமாக நம்முடைய வாழ்க்கை முறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். செரிமான கோளாறு பிரச்சனைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் நிறைய மருந்துகள் இருக்கின்றன. அறிகுறிகளை வைத்து சரியான சிகிச்சை வழங்கப்படும். இதில் முழுமையான தீர்வு கிடைக்கும்.