கம்பெனியில் வேலை பார்க்கும் உங்களுக்கு, திடீரென்று மேனேஜர் மேல் மரியாதை வரும், அவர் சொல்லும் ஜோக்குகளுக்கு சிரிப்பு வரும், லேட் ஈவினிங் ஆஃபீசில் இருந்து வேலையை முடித்துச் செல்லலாமே என்றெல்லாம் தோன்றும். எப்பொழுதும் வெளுத்துக்கட்டும் ஆஃபீஸ் பார்ட்டியில், குறைவாகவே சாப்பிட தோன்றும். நண்பர் பிரேக் போகலாம் என்று அழைத்தால், 'எதுக்குடா அடிக்கடி, எனக்கு வேலையிருக்கு' என்று சொல்லத் தோன்றும். இதெல்லாம் என்ன? காதலா என்றால் இல்லை, அப்ரைசல் பீதி என்று சரியாகச் சொல்லுவார்கள் கார்ப்ரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். அந்த அளவுக்கு பரவலாக தெரிந்த விஷயமாகிவிட்டது அப்ரைசல் (appraisal).
இந்த காலகட்டத்தில் நமது மேனேஜர்களும் மனிதவள மேலாண்மை துறையும் (HR) நமக்கு வழக்கமாக இல்லாத வேறு ஆட்களாக தெரிவார்கள். 'ஏத்தி வச்சு அழகு பாக்குறவண்டா நான்' என்பார்கள் சிலர். 'பயப்படுறியா குமாரு?' என்று நக்கல் செய்வார்கள் சிலர். நமது திடீர் மாற்றங்களைப் பார்த்து, 'ஆஹான்' என்று நம்மை கலாய்ப்பாளர்கள் நமது டீம் மேட்கள். இது எல்லாத்தையும், 'கண்டுக்காம போடா சுனாபானா, போ..போ...போ..' என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளவேண்டும்.
ஏப்ரல், மே மாதம் வந்தாலே அலுவலகத்தில் அப்ரைசல் போர் நடக்கும். 'நமக்கு என்ன ரேட்டிங் வந்துருக்கோ'னு எகிறும் எதிர்பார்ப்போட ஸ்கூல்ல எக்ஸாம் எழுதிட்டு பேப்பர திருத்தி டீச்சர் நம்ம கையில் கொடுக்குற வரைக்கும் இருக்குமே, அதே பரபரப்புக்கும் படபடப்புக்கும் நம்மள திருப்பி கொண்டுபோற விஷயம்தான் 'அப்ரைசல்'. பணியாளர்களோட பணித்திறனை வச்சு அவங்களோட பெர்பாமன்ஸ்க்கு மார்க் போட்டு பணியேற்றம் பண்ணலாமா, பணிநீக்கம் பண்ணலாமா, கொடுக்குற சம்பளத்தை அதிகப்படுத்தலாமா, இல்ல கொடுக்குறது ரொம்ப அதிகம்னு சொல்லி குறைக்கலாமா, இப்படி எல்லா ஏற்ற இறக்க செயல்களையும் மேனேஜ்மென்ட் மற்றும் HR என்ற நவீன கால எஜமான்கள் தீர்மானிக்கற நடைமுறைதான் அப்ரைசல் (Performance Appraisal).
அப்ரைசல பாத்து பயப்பட தேவையில்லை. ஒரு வகையில் நம்மள சுய பரிசோதனை செய்வது நல்லதுதானே? இதில் மற்றவர்கள் நம்மை பரிசோதனை பண்ணி ரிப்போர்ட் தருகிறார்கள். அதே நேரம், இந்த அப்ரைசல் முறை சில நிறுவனங்களில் நிறுவனம் மற்றும் ஊழியருக்கு இடையிலான மற்றும் மேனேஜர் - டீம் மெம்பர் இடையிலான தனிப்பட்ட பிரச்சனைகள், காரணங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு ஒரு மிரட்டல் கருவியாக நடக்கிறதென்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. அது, உண்மையும் கூட. பல நிறுவனங்களிலும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று செவ்வனே வேலை செய்பவருக்கு குறைந்த ரேட்டிங்கும், வேலையை குறைவாக செய்துவிட்டு அனைவரிடமும், முக்கியமாக மேனேஜரிடம் கலகலவென பழகும் சிலருக்கு அதிக ரேட்டிங் வழங்கப்படுவதுண்டு. இருந்தாலும், அடிப்படையில் அப்ரைசல் என்பது திறமை வாய்ந்த பணியாளரைக் கண்டறிந்து உயர்விக்கும் நிகழ்வுதான். இதை வெறுப்பதை விட எப்படி செவ்வனே எதிர்கொள்வது என்று சிந்தித்து செயல்படுவதுதான் சாமர்த்தியம். அதைத்தான் இப்போ பாக்கபோறோம்.
முதல் பாய்ண்டையே எடுத்துக்குவோம். அதிக வேலை செய்து யாரிடமும் பெரிதாக பேசாமல், பழகாமல் இருப்பவருக்குக் குறைந்த ரேட்டிங், வேலை அதிகம் செய்யாமல் அனைவரிடமும் பழகுபவருக்கு அதிக ரேட்டிங் என்ற சூழ்நிலையில் நாம் எப்படி இருக்க வேண்டும்? இரண்டின் கலவையாக இருக்க வேண்டும். இன்றைய வேலை உலகம் என்பது டீம் ஒர்க் என்ற அடிப்படையில்தான் இயங்குகிறது. அதனால், டீமின் மொத்த அவுட்புட் (உற்பத்தி/விளைவு) டீமில் உள்ள அனைவரின் பங்களிப்பில் வருவது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில், வேலை செய்யாமல் அனைவரிடமும் பழகுபவராக இருந்து கொள்ளுதல் நலம் என்று நினைத்தால் அது தவறு. அப்படிப்பட்ட ஆட்கள் சீக்கிரம் மாற்றிக்கொள்வார்கள். சில ஆண்டுகள், அல்லது ஒரு கம்பெனி மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். வேலை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் டீமில் அனைவரிடமும் சுமூகமாக இருப்பது மற்றும் செய்த வேலையை வெளிப்படுத்துவது. ஏனெனில், நிறுவனங்கள் எதிர்பார்ப்பது தனி மனித வேலையை மட்டுமல்ல, டீமுடன் நாம் பழகி, எதிர்காலத்தில் டீமை வழிநடத்தும் திறமையைதான். அதனால்தான் பல இடங்களிலும் நன்றாக வேலை செய்து, ஆனால் அதிகம் பழகாத பலர் அப்ரைசலில் கைவிடப்படுகிறார். அதையும் தாண்டி, அவர்களுக்கு திறமையான, நல்ல மேனேஜர் அமைந்திருந்தால், அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.
நம்ம கூட வேலை செய்யும் சீனியர்ஸ்க்கு தெரியும், இந்த அப்ரைசலில் புதுசா நீந்த வந்த கத்துக்குட்டி மீன்கள்தான் முதலில் பிடிக்கப்படுவார்கள் என்று. எனவே உங்கள் பணியில் என்னென்ன சிரமான பகுதி (உங்களுக்கு சிரமம் என நினைக்கும் பகுதி) உள்ளது, உங்கள் நிறுவனத்தில் முக்கியமாகக் கருதப்படும் 'பாராமீட்டர்ஸ்' (parameters - அளவுருக்கள்) என்னென்ன, அதை எப்படி டீல் செய்வது என கேட்டு அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். அப்ரைசல் வரும் மார்ச், ஏப்ரல் மாதம் மட்டும் இதை நினைக்காம எப்பொழுதும் ஆலோசனைகளை கேளுங்க. அப்படி கேக்கிறவங்கதான் ரியல் புத்திசாலி. நீங்க ரியல் புத்திசாலியா இருக்க ஆசைப்படுறீங்களா, இல்லையா?
சில சமயங்களில் உங்க மேல திணிக்கிற வேலையா இருந்தாலும் பரவாயில்ல, பாட்ஷா பட மாணிக்கம் மாதிரி சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கங்க. ஆனா, நீங்க செஞ்ச வேலைனு ஒரு பெரிய ஆதாரம் இருக்குற மாதிரி அந்த வேலைய செஞ்சு முடிச்சு, இவர்தாம்பா இந்த வேலைய செய்து முடிக்க சரியான ஆளு அப்படிங்கிற நம்பிக்கையைக் கொடுங்க. தீயா வேல செய்யனும் குமாரு, செஞ்சதுக்கு அடையாளமா சாம்பலாவது இருக்கணும்.
உலகத்தில இருக்க எல்லா சிறந்த நிறுவனங்களிலும் மிக சிறந்த அப்ரைசல் முறைகள் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அதாவது, சிறந்த நிறுவனங்களில். அதனால ஒளிவு மறைவு இல்லாத அப்ரைசல் முறைகள் இருக்குதா, இல்லையா என்பதிலேயே நீங்க வேலை செய்யும் நிறுவனத்தோட லட்சணம் தெரிஞ்சிடும். நீங்க பாதிக்கப்பட்டீங்க அப்பிடிக்குறதுக்காக அப்ரைசல தப்பா பேசாம, அதை முழுசா புரிஞ்சுகொள்ள ஆர்வம் காட்டுங்க. அப்படி காட்டினா, இப்போ நல்ல நிறுவனத்துல வேலை செஞ்சிட்டு இருக்கீங்கனு அர்த்தம். இல்லைனா இங்க பேப்பர் போட்டுட்டு, வேற நல்ல நிறுவனத்தல வேலை செய்ய நகரப்போறீங்கனு அர்த்தம். இந்த ரெண்டுல ஏதாவது ஒண்ணுதான் நடக்கும்.
அப்ரைசல் முடிவை உங்களை மேம்படுத்திக்கொள்ள கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கருதினால், அந்த மன நிலையே போட்டி மனநிலையும் சிரமமும் இல்லாத ஒரு விஷயமா அப்ரைசல அணுக வைக்கும். குறிப்பிட்ட திறமை குறைவு, குறிப்பிட்ட ஆளுமை பண்பில் குறை, சின்னச் சின்ன வேலைகளில் வரும் சின்னச் சின்ன பின்னடைவுகள், அனுபவமின்மை என எல்லாவற்றவையும் பட்டியல் போட்டு வாங்கி வைத்துகொள்ளுங்க. அப்படி செய்தால்தான் அடுத்த அப்ரைசல்ல லென்ஸ் வச்சு பாத்தாலும் ஆப்புரைசலா இல்லாம 'அப்'ரைசலா, திறமை படைத்த ஊழியனுக்கு கரும்ப கையில கொடுத்த மாதிரி இருக்கும்.
சமீப ஆண்டுகளாக பல மென்பொருள் நிறுவனங்களும் அதிக சம்பளம் வாங்கும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை தேவையற்ற பாரமாக நினைத்து, அவர்களை வெளியேற்ற ஒரு ஆயுதமாக அப்ரைசல்களை பயன்படுத்துகின்றன. அப்படி நடத்தப்படும் அப்ரைசல்களில் நாம் என்ன செய்தாலும் தேற முடியாது. அதில் பலியாகாமல் இருக்கவும் வழிகள் இருக்கிறதென 'கார்ப்ரேட் குரு'கள் சொல்கிறார்கள். அது தனி கதை. இன்னொன்றையும் நினைவில் வச்சுக்கணும். ஒரு ஆண்டுல நீங்க செய்த பணியை ஒரு அமைப்பு தன்னோட தேவைக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று அளவிடும் முறைதானே தவிர, அது ஒன்னும் உங்களோட வாழ்நாள் பணித்திறமைய ஒட்டுமொத்தமா ''இது தான் நீ'' என்று சொல்லும் விஷயம் இல்லை. உங்களை உள்நோக்கிப் பார்க்க அவங்க கொடுக்குற ஒரு வாய்ப்பு. அதுனால, அடுத்த முறை தூக்கிரலாம்னு இப்போவே அசத்தலா வேலையைத் தொடங்குங்க நண்பா...