Skip to main content

அல்சர் அலர்ட்... நீங்கள் செய்யக் கூடாதது இதுதான்...

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

அல்சர் ஒரு சிறு நோய்தான், அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் வரை...  அடப்போங்க இது கல்லையே கரைக்கும் வயிறு அப்படினு பன்ச் டயலாக் பேசாதீங்க. ஏனென்றால் அல்சர் வந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி.


 

ulcer

 

சாப்பிடாவிட்டாலும் வலிக்கும், சாப்பிட்டாலும் வலிக்கும், கண்ணுக்குமுன் ஆயிரம் நல்ல சுவையான உணவுகள் இருந்தாலும் எதையும் சாப்பிடமுடியாது. காரம் அதிகமிருந்தாலும் வலிக்கும், புளிப்பு அதிகம் இருந்தாலும் வலிக்கும் என தெனாலி கமல் போல அடுக்கிக்கொண்டே போவார்கள். முன்பு கூறியதுபோல அல்சர் சிறு நோய்தான், அது நமக்கு வராதவரை.

இரைப்பை சுவர்களில் ஏற்படும் புண்களுக்கு பெயர்தான் அல்சர். இது ஒன்றுதான் சமத்துவத்தை பின்பற்றுகிறது. ஆம் இது ஆண், பெண், வயதானவர்கள், குழந்தைகள், பணக்காரர்கள், ஏழைகள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. அல்சர் மூன்று வகைப்படும்.  முன்சிறுகுடலில் ஏற்படும் புண் "டியோடினல் அல்சர்" என்றும், இரைப்பையில் ஏற்படும் புண் "கேஸ்ட்ரிக் அல்சர்" என்றும், உணவுக்குழல், சிறுகுடல், இரைப்பை ஆகியவற்றில் ஏற்படும் அல்சர் "பெப்டிக் அல்சர்" என்றும் அழைக்கப்படுகிறது. 

இதற்கான காரணங்கள் என பார்க்கும்போது, நேரத்திற்கு சாப்பிடாததுதான் முதலாவதாக வந்து நிற்கும் (பேச்சுலர்ஸ் கவனத்திற்கு). இரண்டாவதாக, புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது. 'நான் நன்றாக சாப்பிடுகிறேன் இருந்தும் எனக்கு அல்சர் வந்துவிட்டதே' என்பவரா நீங்கள் அப்போது உங்கள் உணவு பழக்கம் தவறு என்று அர்த்தம். காரம், புளிப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை முடிந்தவரை தவிருங்கள். எனக்கு நேரமில்லை என கூறாதீர்கள், நேரம் தவறி சாப்பிடுவதும் அல்சருக்கு வழிவகுக்கும். நாம் இப்போது கடைபிடிக்கும் அந்நிய உணவுப்பழக்கங்களும் அல்சருக்கு வழிவகுக்கும். தண்ணீர் மற்றும் உணவுகளில் உள்ள பாக்டீரியாக்களாலும் அல்சர் ஏற்படும்.  நீங்கள் சொல்வதை பார்த்தால் என்ன செய்தாலும் அல்சர் வரும்போலேயே என நினைப்பவர்களுக்கு....  வேறுவழியில்லை நாம் அந்தமாதிரியான காலகட்டத்தில்தான் உள்ளோம். 

 

ulcer


இதற்கான அறிகுறிகள் பல நிலைகளில் ஏற்படுகிறது. முதல்நிலையில் ஏற்படுவது நெஞ்செரிச்சல் மற்றும் புளிப்பு ஏப்பம், அதைத் தொடர்ந்து பசியின்மை மற்றும் சிறிதளவு உணவு உண்டவுடனே வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுதல். அடுத்த நிலை அடிவயிற்றில் வலி, இரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் வயிற்றுவலி ஏற்படும். இவைகளுக்கெல்லாம் காரணம் புண்ணின்மீது அமிலம் படுவதுதான். அல்சரை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாமல் விட்டுவிட்டால் புண்ணில் இரத்த கசிவு ஏற்பட்டு இரத்த வாந்தி வரலாம், குடலில் துளை விழுவதற்கான வாய்ப்பும் உண்டு. 

இதற்கு மாத்திரை, மருந்துகள் என நிறைய உள்ளன. நாம் அன்றாட உணவின்மூலம் இதை எப்படி சரிசெய்வது என பார்ப்போம். 
 

fruits & vegetables



தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என கேள்விப்பட்டிருப்போம். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆப்பிள் சாப்பிடுங்கள், அது அல்சர் வரும் வாய்ப்பைக் குறைக்கும். வீட்டு சாப்பாட்டில் முட்டைக்கோஸ், காலி ஃபிளவர், ப்ரோக்கோலி, முள்ளங்கி, பொரியல் வைக்கும் போது  வேணாம், வேணாம்னு சொன்ன பாவம்தான் நாம இப்படி இருக்க காரணம் அப்படினு நெறைய பேர் புலம்புவாங்க. அப்படி நீங்களும் புலம்பக் கூடாதுனா  இந்தக் காய்களையெல்லாம் சாப்பிடுங்கள். கேரட், கண்ணுக்கு மட்டுமில்ல, வயித்துக்கும் நல்லதுதான். அதனால கேரட் சாப்பிட்டாலும் அல்சர் குணமாகும். க்ரீன் டீ யும் அல்சரை குணப்படுத்தும். தேன், ஆலிவ் ஆயில், தயிர் ஆகியவையும் அல்சரை குணப்படுத்தும். 

இவைகளெல்லாம் அல்சரை குணப்படுத்தும் அன்றாடம் கிடைக்கக் கூடிய உணவுகள். உங்களுக்கு அல்சருக்கான அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள். அது போல உணவே மருந்து என்று முன்னோர்களை கூறியது என்றும் தவறுவதில்லை. அதனால், பேச்சுலரென்றாலும் சேல்ஸ் வேலைகளில் உள்ளவர்களென்றாலும் உணவின் மீது அக்கறை காட்டுங்கள்.

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சென்னையில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Vegetation sales start in mobile vehicles in Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதித்து காய்கறிகளைக் கொண்டு வரும் லாரிகள் சென்னை நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மழை பாதித்த இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.