தினமும் பரபரப்பாக காலையில் கிளம்பி வேலைக்கு போய் விட்டு மாலை வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்தவர்களுக்கு, திடீரென பணியிலிருந்து ஓய்வு பெற்ற வயதான காலத்தில் மனக்குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. அப்படியான வேலை செய்து ஓய்வு பெற்ற காலத்தில் மனநலத்தை எவ்வாறு பேணிக் காப்பது என்பது குறித்து டாக்டர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்
பணி ஓய்வு காலத்தில் உடல்நலத்தை எவ்வாறு நாம் பராமரிக்க வேண்டுமோ, அதே அளவுக்கு மனநலத்தையும் பாதுகாக்க வேண்டும். நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாக சாப்பிட வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு, நாமாகவே நம்முடைய பணிகளைச் செய்து பழகிக்கொள்ள வேண்டும். இவ்வளவு நாட்கள் நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, நேரமின்மை காரணமாக செய்ய முடியாமல் போயிருக்கும். அதுபோன்ற விஷயங்களை இந்த நேரத்தில் செய்யலாம்.
இசை கற்றுக்கொள்ள வேண்டும், புதிய மொழியை அறிந்துகொள்ள வேண்டும், சில இடங்களுக்கு சென்றுவர வேண்டும் என்று உங்களுக்கு பல்வேறு ஆசைகள் இருந்திருக்கலாம். அவை அனைத்தையும் உங்களால் இப்போது நிறைவேற்ற முடியும். சமுதாயத்துக்கு நாம் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யலாம். தொடர்ச்சியாக சமுதாயத்துக்கு ஏதாவது உதவி செய்துகொண்டே இருக்கலாம். சிலர் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளின் வீட்டுக்கு செல்வார்கள். சிலர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வார்கள்.
பணி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று பலர் கூறுவார்கள். அதனால் ஓய்வுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே, வருங்காலத்தில் என்ன செய்வது என்பதை முடிவுசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் நீங்களாகவே இருப்பதற்கான தருணம் இது. வாழ்க்கையின் இரண்டாவது பாதியாக இதை எடுத்துக்கொண்டு, நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்த அனைத்து விஷயங்களையும் செய்யலாம். வேலை செய்யும் காலத்தில் அவ்வப்போது மன உளைச்சல் இருக்கும். அது எதுவும் இல்லாமல் இப்போது மகிழ்ச்சியாக வாழலாம்.
விலங்குகள் பராமரிப்பிலும் கவனத்தை செலுத்தலாம். மீன் வளர்க்கலாம். நீங்கள் மருத்துவராக இருந்தால், அடித்தட்டு மக்களுக்கு உங்களுடைய சேவை காலம் முழுவதும் தேவைப்படும். அரசின் திட்டங்களை எளிய மக்களுக்கு விளக்கலாம். இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தேவையான மாத்திரைகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டு, விரைவாக படுக்கைக்கு செல்வது அவசியம். வயதானவர்களும் அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்க்கலாம். இவை அனைத்தையும் செய்வதன் மூலம் மகிழ்ச்சியான ஓய்வு காலத்தை நாம் அனுபவிக்கலாம்.