மலச்சிக்கலால் உருவாகும் மூல நோயின் தன்மைகள் பற்றி தொடர்ச்சியாக நமக்கு விழிப்புணர்வு தகவல்களை டாக்டர் சந்திரசேகர் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக உணவு முறையினால் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்படும் சிக்கல் பற்றியும், வெளியேறும் மலத்தினை வைத்தே நோயின் தன்மையை கண்டறிவது பற்றியும் விளக்குகிறார்.
நமது உணவு முறையே சரிவிகித உணவாகத்தான் இருந்து வந்தது. அதாவது கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும், செரிமானத்திற்கு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள், புரதத்திற்கு பருப்பு கூட்டு இருக்கும், நார்ச்சத்திற்கு பொரியல் இருக்கும் இவ்வாறாக அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொண்டோம். தண்ணீரும், மோரும் இறுதியாக எடுத்துக் கொள்ளுதல் எளிமையாக செரிமானம் அடைந்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணவு முறை காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், இப்போதெல்லாம் எல்லா காய்கறிகளையுமே ஒன்றாக சேர்த்து சமைத்து கொடுக்கிறார்கள். உணவில் கறியை வேக வைத்து பிரியாணியாக கொடுக்கிறார்கள். பக்கெட் சிக்கன் என்று வெறும் சிக்கனை மட்டுமே வாங்கி வைத்து உண்ணுகிறார்கள். இது சரியாக செரிமானம் அடையாமல் மலச்சிக்கலை உருவாக்குகிறது. முந்தைய காலங்களில் மலம் வெளியேறிய பிறகு பரிசோதிப்பார்கள், கருப்பாக இருந்தால் உள் உறுப்புகளில் இரத்த கசிவு இருக்கிறது, வெள்ளையாக வெளியேறினால் மஞ்சள் காமாலை இருக்கிறது, ரத்தக்கசிவு வெளியேறினால் மூலம் இருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்வார்கள்.
இன்றைய வெஸ்டர்ன் டாய்லெட் முறையில் எப்படி மலம் வெளியேறுகிறது என்று அவரவர்களுக்கே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி நோய் என்ன இருக்கிறது என்பது கண்டறிய முடியும்? நோயினை கண்டறிய முடியாத சாத்தியமற்ற நிலையில் தான் இந்த வாழ்க்கை முறை இருக்கிறது. வலியே இல்லாமல் இரத்தம் வருகிற மலச்சிக்கலால் மூல நோய் உருவாகும். ஆரம்பத்திலேயே மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மருந்து, மாத்திரை, உணவு பழக்க வழக்க மாற்றங்களால் மூல நோயைச் சரி செய்ய முடியும். நோயின் தன்மை முற்றும் போது அறுவை சிகிச்சையால் தான் மூல நோயைச் சரி செய்ய முடியும்.