தலைவலி குறித்த பல்வேறு தகவல்களை மூளை, முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மரியானோ புருனோ விளக்குகிறார்.
தலைவலி என்பது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனை. பலருக்கும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலையில் உள்ள உறுப்புகளில் எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் அதனால் தலைவலி வரலாம். மண்டை ஓட்டில் சில உள் அறைகள் இருக்கின்றன. இவற்றில் எதில் பிரச்சனை என்றாலும் அது தலைவலியில் தான் முடியும். மூளையில் இருக்கும் பிரச்சனையால் மட்டும் தான் தலைவலி ஏற்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. கண்களில் பிரச்சனை இருப்பவர்களுக்கும் தலைவலி ஏற்படும்.
அவர்கள் கண் மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து, கண்ணாடி அணிந்துகொண்டால் தலைவலி சரியாகும். தாமாகச் சென்று ஸ்கேன் எடுப்பது தவறு. தலைவலி வந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முதலில் நரம்பியல் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். என்ன காரணத்தினால் தலைவலி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும். மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக ஏற்படும் தலைவலிக்கு நிச்சயமாக ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.
ஆனால் எந்தவிதமான தலைவலிக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பதற்கு விதிமுறை இருக்கிறது. மருத்துவரிடம் செல்லும்போது அவர்கள் இது குறித்து தெளிவாக விளக்குவார்கள். நீங்களாகவே மாத்திரை சாப்பிடுவதும் தவறான விஷயம். தமிழ்நாட்டில் பலர் கண்ணாடி அணிவதே இல்லை. கண்களில் பவர் இருந்தாலும் கண்ணாடியை வாங்கி வீட்டிலேயே வைத்து விடுகின்றனர். கண்ணாடியை வீட்டில் வைத்தால் தலைவலி எப்படி சரியாகும்? கண்ணாடியைத் தொடர்ந்து அணிய வேண்டும்.
மூளை புற்றுநோயாலும் தலைவலி ஏற்படும். ஆனால் அது மிக மிக அரிதானது. சாதாரண தலைவலிக்கு அதீதமாக பதற வேண்டிய அவசியம் இல்லை. ஒரே ஒருமுறை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் சென்று என்ன பிரச்சனை என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ற சரியான சிகிச்சையை எடுத்து தலைவலியை சரிசெய்ய வேண்டும்.