டீ குடிப்பது என்பது அன்றாடம் நம் வாழ்க்கையில் பழகிப்போன ஒன்றாகும். அப்படி தினமும் டீ குடிப்பதாலும் மற்றும் காலை உணவைத் தவிர்ப்பதாலும் ஏற்படும் விளைவுகள் குறித்து டாக்டர் அருணாச்சலம் நமக்கு விளக்குகிறார்.
1996 ஆம் ஆண்டு நான் சந்தித்த ஒரு நோயாளி தினமும் 10 முறை டீ குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அதிகம் டீ குடித்தால் குண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அவரிடம் நான் சொன்னேன். அதன் பிறகு டீ குடிப்பதை அவர் குறைத்தார். அவருடைய உடல் எடையும் குறைந்தது. டீயிலும் கலோரிகள் இருக்கின்றன. டீ குடிப்பதைக் குறைத்தால் உடல் எடை குறையவும் நிச்சயம் வாய்ப்புண்டு. சிலர் உடல் எடை குறைவதற்காக காலை உணவைத் தவிர்க்கின்றனர். அது தவறு.
நடிகர், நடிகைகள் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு வாழ்வதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால் தான் அவர்களுக்கு உடல் எடை கட்டுக்குள் இருக்கிறது. பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குழந்தை மிச்சம் வைக்கும் உணவையே அவர்களும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு பகல் உணவை உண்ணாமல் மதியம் வரை காபி, டீ மட்டுமே குடிப்பார்கள். மதியம் 12 மணிக்கு அதிகமான அளவில் உணவை உண்ணுவார்கள். அதன் பிறகு சிறிது நேரம் தூங்குவார்கள்.
இவை அனைத்தும் தான் திருமணத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம். குழந்தை பெறுவது என்பது உடல் பருமனுக்கான காரணம் அல்ல. ஸ்கூட்டர் ஓட்டும் பெண்கள் நடக்கும் பழக்கத்தையே மறந்துவிடுவார்கள். காலை உணவை நிச்சயமாக தவிர்க்கக் கூடாது. அதனால் ஏற்படும் ஆபத்துகளை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.