'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கொரோனா கொடுத்த இன்னொரு கொடுமையான விசயம், கைக்குழந்தைகள் இரண்டு மணிக்கு உறங்குகிறது என்பது தான். எல்லோரும் உறங்குகிறோம். ஆனால், குழந்தை மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், கொரோனா நேரத்தில் குடும்பமே சந்தோஷமாக இருக்கிறோம் என்ற பெயரில், இரவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியில் சினிமா, OTT-யில் படங்களைப் பார்த்து விட்டு பின்பு லேட்டாக உறங்குவது. இதன் காரணமாக, குழந்தையின் ரிதம் கெட்டுப் போனது.
குழந்தைகள் எப்படி என்றால் இரவு 08.00 அல்லது இரவு 08.30 மணிக்கு எல்லாம் உறங்கிவிடுவார்கள். நான் படித்த சோவியத் யூனியனில் இரவு 08.30 மணிக்கு குழந்தைகளுக்காக 'லுல்லாபி' என்ற ஒரு புரோகிராமே உள்ளது. சோவியத்தின் தேசிய தொலைக்காட்சியில் இந்த மாதிரி ஒரு பாட்டு போடும் போது, குழந்தைகள் அந்த பாடலைக் கேட்டு உறங்கிவிடுவார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். பெண்கள் தங்களின் குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு, பின்னர் மற்ற வேலைகள் இருந்தால் செய்யலாம்.
ஆனால், இப்போது குழந்தைகளை என்ன பண்ணாலும் உறங்க வைக்க முடியவில்லை. நமது பின்னால் எழுந்து வந்து உட்காருகிறது. குழந்தைகளுக்கு கூட தூக்கமில்லாமல் போன காலகட்டத்தில் இருக்கிறோம். தூக்கமின்மையினால் வரக்கூடிய நோய்கள் தான் அதிகமாக இருக்கும். தூக்கம் வர வைக்க என்ன செய்ய வேண்டும்? சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் 'ப்ளான்னுடு ஸ்லீப் ஹவர்ஸ்' என்று வைத்துக் கொள்ள வேண்டும். ஷிப்ட்டுக்கு செல்பவர்கள் அதற்கு ஏற்றவாறு காலை, மதியம், இரவு உணவுகளைச் சாப்பிடுவதற்கும், உறங்குவதற்கும் 'டைம் டேபிள்' போட்டுக் கொள்ள வேண்டும். எட்டு மணி நேரம் உறங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆறு மணி நேரமாவது உறங்க வேண்டும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், இவற்றில் ஏதாவது ஒரு நாளில் அறையை அடைத்துக் கொண்டு 10 மணி நேரம் உறங்கினாலும் பரவாயில்லை.
ஆனால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களிலும் சரியாக உறங்காமல், பணிக்கோ அல்லது ஜிம்முக்கோ சென்றாலும், நாள்பட நீங்கள் நோயை நோக்கி செல்கிறீர்கள் என்று அர்த்தம். ஜிம்முக்கு போகலாம். கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால், சரியாக உறங்கவில்லை என்றால் திடீரென்று சர்க்கரை உள்ளிட்ட வியாதிகள் வரக்கூடும். தினமும் ஒரு நேரத்தில் உறங்கினால், அதே நேரத்தில் நாள்தோறும் தானாகவே தூக்கம் வரும். உறக்கத்திற்கு இருட்டு மிக அவசியம். இருட்டு இருந்தால் மட்டுமே தூக்கம் வரும். செல்போனில் 'டைம்' செட் செய்து, பாடலைக் கேட்டு பின்னர் உறங்கலாம்.
எனவே, நாள்தோறும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறக்கம் அவசியம். அப்படி உறங்கவில்லை என்றால், வார இறுதி நாட்களில் நன்றாக உறங்க வேண்டும்" என்றார்.