உடல் ஆரோக்கியத்தில் தூக்கத்தின் அவசியம் குறித்தும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப தூக்கத்தின் அளவு வித்தியாசப்படுவதையும் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விவரிக்கிறார்.
குழந்தைகள் நிறைய நேரம் தூங்குவார்கள். சிறுவர்கள் தாமதமாகத் தூங்கி தாமதமாக எழுவார்கள். இளைஞர்கள் சரியான நேரத்திற்கு தூங்கி சரியான நேரத்தில் எழுவார்கள். வயதானவர்கள் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவார்கள். ஒவ்வொரு வயதினருக்கும் தூக்கத்தில் ஒவ்வொரு வகையான பழக்கம் இருக்கும். ஒரு நாளைக்கு நிச்சயமாக 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். நம் உடலில் ஸ்லீப் சைக்கிள் என்று ஒன்று இருக்கிறது. சரியான தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் காலை நம்மால் சரியாக வேலை செய்ய முடியாது.
தூக்கம் இல்லாமல் போகும்போது உடலின் வேகம் குறையும். நாம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நேரத்தின் மாற்றத்தால் தூக்கத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இருட்டிய பிறகு நாம் வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொள்வது செயற்கையான ஒரு விஷயம். இரவு 10 மணிக்காவது தூங்கி காலையில் 5 மணிக்கு எழுவது நல்லது. இதன் மூலம் மூளை மற்றும் உடல் சுறுசுறுப்பாக இயங்கும். வயதானவர்கள் சீக்கிரமாக எழுந்து விடுவார்கள். அதை நம்மால் மாற்ற முடியாது.
இன்று பலர் இரவு நேரங்களில் மொபைல் போனில் ஆக்டிவாக இருக்கிறார்கள். இது நம்முடைய ஆரோக்கியத்தைக் கெடுக்கும் விஷயம். இதனால் அடுத்த நாள் காலை பிரச்சனை ஏற்படுகிறது. நல்ல தூக்கத்தின் மூலம் நம்முடைய வேலைத்திறன் அதிகரிக்கிறது. மொபைல் போன் வெளிச்சத்தை நாம் பார்க்கும்போது சூரியன் இன்னமும் இருக்கிறது என்று நம்முடைய கண்கள் நினைத்துக்கொள்ளும். இதனால் அது நம்மை விழிப்பு நிலையில் வைத்துக்கொள்ளும். இரவு 9 மணிக்கு நம்முடைய உடலில் மெலடோனின் சுரக்கும். அவ்வாறு சுரக்கவில்லை என்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.