தூங்கும் போது அதீத சத்தம் எழுப்பி அருகில் தூங்குவோரையும் தொந்தரவு செய்வது குறட்டை; இது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்
குறட்டை என்பது உடல் பருமன் சார்ந்த ஒரு விஷயம். மதுவை உபயோகிப்பதும் இதற்கு ஒரு காரணம். சுவாசப் பாதையில் கொழுப்பு உருவாகும்போது குறட்டை ஏற்படும். ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கு குறட்டை வருவது குறைவாக இருக்கும். 30, 40 வயதில் இருப்பவர்களுக்கே முக்கால்வாசி குறட்டை பிரச்சனை ஏற்படுகிறது. தூக்கம் என்பது பழக்கம் சார்ந்த ஒரு விஷயம். சில விஷயங்களை ஒரே நேரத்தில் செய்து பழகுவது உடலுக்கு நல்லது. தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தூங்க வேண்டும். அதேபோல் ஒரே நேரத்தில் எழவும் பழகிக்கொள்ள வேண்டும்.
நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தூங்குவதற்கு ஏற்றது போல் அமைய வேண்டும். அதிக சத்தமோ, வெளிச்சமோ இருந்தால் தூக்கம் கெடும். பகலில் அதிக நேரம் தூங்கினால் இரவில் தூக்கம் வருவது சிரமமாகும். மதிய நேரத்தில் சிறிய தூக்கம் நல்லது தான். இப்போது பலருக்கு காரணமே இல்லாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதுவும் தூக்கமின்மைக்கு முக்கியமான காரணம். குறிப்பாக பெண்களுக்கு திருமணம், குழந்தை, குடும்பம் என்று பல்வேறு காரணங்களினால் மன உளைச்சல் ஏற்படுகிறது. கடன் தொல்லை, அலுவலக சிக்கல்கள் என்று ஆண்களுக்கும் மன உளைச்சல் இருக்கிறது.
உடல் எடையைக் குறைப்பது, உடலுக்கான வேலையை அதிகப்படுத்துவது, ஒரு பக்கமாக சாய்ந்து படுப்பது, சூடாக ஏதாவது குடித்துவிட்டு படுப்பது ஆகியவை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். பலருக்கு வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலமும், சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமும் இதை குணப்படுத்த முடியும்.