மன அழுத்தம் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.
இன்று மன அழுத்தம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. நம்மை அறியாமல் நமக்குள் ஒரு பயம் உருவாகி மன அழுத்தமாக மாறுகிறது. மன அழுத்தத்துக்கு உள்ளான சிலர் எதுவும் பேச மாட்டார்கள். சிலர் அதிகமாகக் கோபப்படுவார்கள். சிலர் அழுவார்கள். சிலர் அதிகமாகப் பயப்படுவார்கள். ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு வகையான மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தம் அதிகமாகும்போது அதிகமாக யோசிக்கும் தன்மை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. மன அழுத்தம் என்பது உடலையும் மனதையும் பாதிக்கக்கூடியது. குழந்தைகள் உயர்கல்வியை நோக்கி வரும்போது அவர்கள் மீது பெற்றோர் பெரிய அழுத்தத்தைக் கொடுக்கின்றனர். அவர்கள் என்ன படிக்க வேண்டும் என்று இவர்கள் தான் முடிவு செய்கின்றனர். இதுபோன்ற அழுத்தத்தைக் கொடுக்கும்போது மாணவர்களுக்கு அவர்கள் மீதே சந்தேகம் ஏற்பட்டுவிடும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது ஏற்படும் உடல் வலி, தூக்கமின்மை ஆகியவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.
திருமணமானவர்களிடம் குழந்தை எப்போது என்று கேட்டு இந்த சமுதாயம் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களுக்கு குடும்பம், பொருளாதாரம் குறித்து சிந்திப்பதாலும், வேலை நிமித்தமாகவும் மன அழுத்தம் ஏற்படும். மன பதட்டம் ஏற்படும்போது முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி ரிலாக்ஸ் ஆகும் போது கோபம் குறையும். கோபப்படும்போது கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்க வேண்டும். நன்றாக இழுத்து மூச்சு விட வேண்டும். நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும். யோகா செய்யலாம். அதன்பிறகு நமக்கே உடலில் மாற்றம் தெரியும்.