பூமியின் கந்த புலத்தில் ஏற்பட்டுவரும் மாற்றத்தால் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுதல்களில் எதிர்காலத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா வரை பரவியுள்ள நிலப்பரப்பில், பூமியின் காந்தப்புலம் படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிசெய்துள்ளனர். பொதுவாகப் பூமியின் காந்தப்புலம் என்பது பூமியில் மனிதர்களின் வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வான்வெளி கதிர்வீச்சு மற்றும் சூரியனிலிருந்து வரும் பாதிப்புத்தரக்கூடிய துகள்களை வளிமண்டலத்திற்குள் நுழையாமல் தடுத்து வரும் பூமியின் முக்கிய அமைப்பாகும் இந்த காந்தப்புலம்.
இப்படிப்பட்ட இந்த காந்தப்புலம் கடந்த 200 ஆண்டுகளில், அதன் வலிமையில் 9% ஐ இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையேயான பகுதிகளில் இதன் வலிமை மிக அதிக அளவில் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை என அழைக்கப்படும் இந்த நிகழ்வால், 1970 முதல் 2020 வரை, இந்த பகுதியில் குறைந்தபட்ச புல வலிமை சுமார் 24,000 நானோடெஸ்லாவிலிருந்து 22,000 ஆகக் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் இந்த பரப்பளவு ஆண்டுக்கு 20 கி.மீ வேகத்தில் விரிவடைந்தும் வருகிறது.
இப்பகுதிகளில் இதுபோல காந்தப்புலம் பலவீனமாக இருப்பதால் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்கலங்கள் தொழில்நுட்ப செயலிழப்புகளை சந்திக்கும் அபாயம் எதிர்காலங்களில் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். காந்தப்புலம் வலிமையிழப்பதால் பூமியின் அருகில் அமைந்துள்ள செயற்கைக்கோள் சுற்று வட்டப்பாதையில் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் நுழைந்து செயற்கைக்கோள்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. பொதுவாகக் காந்தப்புலத்தின் திசை மாற்றம் என்பது சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஒரு செயலாகவே பார்க்கப்பட்டாலும், காந்தப்புலம் வலிமை குறைவது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.