பி.எஸ்சி., நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப படிவத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் ஆன்லைனில் புதன்கிழமை (அக்.1) வெளியிட்டுள்ளது. அக். 17- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அக். 15- ஆம் தேதி, மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இளங்கலை மருந்தாளுநர் (பி.ஃபார்ம்), பிஸியோதெரபி, ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி, பி.எஸ்சி பிரிவில் நர்சிங், ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோ தெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, பி.ஓ.டி., உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து அக்.1- ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சேர்க்கை தொடர்பான தகவல்கள் அனைத்தும் மேற்கண்ட இணையதளங்கள் வாயிலாகவே வெளியிடப்படும் என்பதால், விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட இணையதளங்களை அடிக்கடி பார்வையிட அறிவுறுத்தப்படுகின்றனர். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவின் கீழ் சேர்க்கை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதற்குரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் கூடுதலாக 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவினருக்கான பிரத்யேக படிவத்தை இணைக்காவிட்டால் அவ்விண்ணப்பதாரர்கள் சிறப்புப் பிரிவின் கீழ் கருதப்பட மாட்டார்கள்.
வயது விவரம்:
அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும், வரும் டிசம்பர் 31- ஆம் தேதியன்று விண்ணப்பதாரர்கள் 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பி.எஸ்சி., நர்சிங் படிப்பைப் பொருத்தவரை, வரும் டிசம்பர் 31- ஆம் தேதிப்படி ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர் 30 வயது நிரம்பாதவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவினர் 35 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.
பி.ஏஎஸ்எல்பி., எனப்படும் ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 1.7.2020ம் தேதி நிலவரப்படி 25 வயது பூர்த்தி ஆகாதவராக இருத்தல் அவசியம்.
கல்வித்தகுதி:
பிளஸ்2 அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேல்நிலை வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் அல்லது விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித பாடங்களை படித்திருத்தல் வேண்டும்.
இளங்கலை மருந்தாளுநர் (பி.ஃபார்ம்) மற்றும் பி.ஏஎஸ்எல்பி., படிப்புக்கு ஓ.சி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி., பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் அல்லது கணித பாடங்களில் சராசரியாக 40 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேலும் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் சமூகத்தினர் மேற்கண்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பி.எஸ்சி., நர்சிங் படிப்பைப் பொருத்தவரை முதன்மைப் பாடங்களில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். பட்டியல் பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை ஆப்டோமெட்ரி படிப்பில் சேர முதன்மைப் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பிளஸ்2வில் தொழில்கல்வி, திறந்தவெளி பள்ளிகள் மற்றும் தனித்தேர்வராக படிப்பை முடித்தவர்கள் துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் 400 ரூபாய். இக்கட்டணத்தை வங்கி இணையதள சேவை மூலம் செலுத்த வேண்டும்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்த பின், மேற்கண்ட இணையதளத்தில் அக்.17- ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த பின், விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்ய முடியாது. முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் பதிவேற்றுவது மட்டுமின்றி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான இணைப்புகளுடன் ஏ4 அளவுள்ள உறையில் வைத்து, 'செயலாளர், தேர்வுக்குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10' என்ற முகவரிக்கு மேற்கண்ட காலத்திற்குள் சேருமாறு தபாலில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களை மேலே குறிப்பிட்டுள்ள இணையதள தகவல் குறிப்பேட்டை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.