"எடைக்கு எடை தங்கம், எடைக்கு எடை பரிசு, இவ்வளவு ஏன், எடைக்கு எடை வெங்காயம் கூட கேள்விபட்டுருக்கோம். அதென்ன எடைக்கு எடை மின்சாரம்?" என்று கேட்கிறீர்களா... ஆம், சில நாட்களுக்கு முன்பு புவிஈர்ப்பு விசையை பயன்படுத்தி ஒளிரும் வகையிலான மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு தேவை எடை மட்டுமே...
இந்த விளக்கிற்கு வேறு எந்தவிதமான மின்சாரமும் தேவையில்லை. 8 முதல் 12 கிலோ எடை மட்டுமே போதும். ஒவ்வொரு நொடியும் எடை இறங்கும்போதும் அதிலிருக்கும் மோட்டார் நிமிடத்திற்கு 1600 முறை சுற்றும். அப்படி மோட்டார் சுற்றும்போது மின்சாரம் உருவாகும். அதன்மூலம் விளக்கு ஒளிரும். இதை ஆறடி உயரத்தில் பொருத்தவேண்டும். இதை உயர்த்தும்போது உங்களுக்கு 12 கிலோ எடையும் தெரியாது, மூன்று கிலோ எடை மட்டுமே இருக்கும். அதனால் எளிமையாக தூக்க முடியும். நீங்கள் எடையை உயர்த்திய நொடியில் இருந்து விளக்கு ஒளிர ஆரம்பித்துவிடும். இது தற்போது 20 நிமிடங்கள் மட்டுமே ஒளிரும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் நடந்துகொண்டு வருகிறது. எந்த மின்சக்தியும் தேவை இல்லாதததால் இது மரபுசாரா எரிசக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.