Skip to main content

  தரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்!!!

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
exam

 

அண்மையில் நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ.(Central Board of Secondary Education) பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்தேர்வுக்கான கேள்வித்தாள் மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொருளாதாரம் கேள்வித்தாள் இவ்விரண்டும் தேர்வுக்கு முன்னரே வெளியாகி பரபரப்பாக்கியுள்ளது. இதனையடுத்து இரண்டு தேர்வுகளுக்கும் மறுதேர்வை சி.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாடப்பிரிவுகள் மட்டுமின்றி 10ஆம் வகுப்பு சமூகஅறிவியல், 12ஆம் வகுப்பு உயிரியல் பாடப்பிரிவுகளுக்கான கேள்வித் தாளும் முன்கூட்டியே வெளியானதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீடியாக்கள் முன் தாங்கள் சி.பி.எஸ்.சி. தேர்வுமுறை மீதான நம்பிக்கையையே இழந்துவிட்டதாகவும், ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் புலம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய தேச அவமானம். பள்ளி பொதுத்தேர்வுகளில் நடக்கும் இத்தகைய மோசடி இந்த தேசத்திற்கு புதிதல்லதான். கேள்வித்தாள்களை திருட்டுத்தனமாக விற்பது, குறிப்பிட்ட மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்பது, கேள்வித்தாள்களை வாட்ஸ் ஆப்களில் அனுப்புவது என பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளில் இந்த மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் வருகின்றன. பள்ளி, கல்லூரி பாடங்களில் தேர்ச்சி பெற திருட்டுதனமாக ஏஜெண்ட்களை வைத்து பணம் கொடுத்து தேர்ச்சி பெறும்முறை காலங்காலமாக நடந்து வருகிறது. அதோடு கடந்த பத்தாண்டுகளாக கேள்வித்தாள்களை விற்பது மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது. கடந்த ஆண்டுகளில் கூட தமிழ்நாடு பள்ளி பொதுத்தேர்வில் கேள்வித்தாள்கள் வாட்ஸ் ஆப் முலமாக வெளியாகி பரபரப்பானது.


 

tnpsc exam


பள்ளி பொதுத்தேர்வுகளில்தான் இந்த மோசடி என்றால் அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் இதைவிட மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெறுகிறது. இந்திய அளவில் ரயில்வே, எஸ்.எஸ்.சி.(Staff Selection Commission) தேர்வுகளின் வினாத்தாள் முறைகேடாக விற்கப்பட்டதை சி.பி.ஐ. விசாரணை செய்ததை நாடறியும். இதைவிட மிகப்பெரிய, இன்றும் தொடர்கதையாகி வரும் மோசடி தமிழகத்தின் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. தேர்வுகளில் பார்க்கலாம். டி.என்.பி.எஸ்.சி. (Tamil Nadu Public Service Commission) குரூப் I மற்றும் குரூப் II தேர்வுகளில் நடந்த மோசடிகள் உச்சநீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குரூப் 4, வி.ஏ.ஒ. தேர்வுகள், குரூப் I   முதன்மை தேர்வில் வினாத்தாள் மோசடி, நேர்முகத்தேர்வு குளறுபடி என பல வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. கடந்த காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்ததையும் நாடறியும். இதில் ஆசிரியர் தேர்வாணையம் (Teachers Recruitment Board)  கொஞ்சமும் விதிவிலக்கில்லை. சமீபத்தில் டி.ஆர்.பி நடத்திய அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் நடந்த முறைகேடு நாடறியும். பின்னர் மறு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

university

      


சரி, பள்ளி- கல்லூரிகளின் பொதுத்தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் மட்டும்தான் இத்தகைய மோசடிகள் நடக்கிறதா. பல்கலைக்கழகங்களில் இதைவிட அதிகமான முறைகேடுகள் நடைபெறுகின்றன. கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்தில் தொடங்கி பணத்திற்காக மதிப்பெண்கள் வழங்குவது, ஆராய்ச்சிப் படிப்பில் முறகேடுகள் என இந்த பட்டியல் நீளமானது. தமிழகத்தில் பல ஆராய்ச்சி மாணவர்கள், ஏற்கனவே வெளிவந்த ஆராய்ச்சி கட்டுரைகளை காப்பியடித்து, புதிய கட்டுரைகள் போல, சமர்ப்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, போலி கட்டுரைகளை கண்டுபிடிக்க, தமிழக பல்கலைகளுக்கு, புதிய 'சாப்ட்வேர்' வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் செயல்படும், 'இன்பிலிப்நெட்', தகவல் மற்றும் நூலக நெட்வொர்க் என்ற மத்திய அரசு நிறுவனம், இந்த சாப்ட்வேரை வழங்கி உள்ளது. அதன்படி, 'தமிழக பல்கலைக்கழகங்கள் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை இந்த புதிய சாப்ட்வேரில் இணைத்து காப்பியடிக்கப்பட்டதா என கண்டுபிடிக்க வேண்டும்' என, யு.ஜி.சி.(University Grants Commission)  உத்தரவிட்டுள்ளது. ஆக இந்தியாவில் ஆராய்ச்சி படிப்பு எந்த தரத்தில் இருக்கிறது என இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

 

rank



இன்னொருபுறம் இந்திய உயர்கல்விகளில் தரம் இல்லையென பன்னாட்டு நிறுவனங்கள் புகார் கூறுகின்றன. அறிவியல் படிப்புகளிலும், பொறியியல் படிப்புகளிலும் மிகக் குறைவான தரத்துடனேயே இந்திய மாணவர்கள் தேர்ச்சியடைவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களை ஆண்டுதேறும் ஆய்வுசெய்து உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் (Global Universities Rankings)  இந்தியாவில் எந்த ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறுவதில்லை. சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் தரவரிசையில் முதல் 25 இடங்களில் உள்ளன. இந்த விஷயத்தை பற்றி பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மிக வேதனையோடு குறிப்பிட்டார். ஆக மொத்தமாக பார்த்தால், குறைபாடுகள் கொண்ட பள்ளி கல்வி தரமும், பொதுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் தொடர்ந்து நடைபெறும் மோசடிகளும் இந்திய கல்வி முறையை சிதைத்து வருகிறது. இவை படிப்பின் மீது நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் வைத்திருக்கும் மாணவர்களுக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆசியாவில் இருக்கும் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் கல்வியின் தரம் மிகவும் மேம்பட்டுள்ளது. ஆனால் இந்த நாடுகளுக்கு முன்னோடியே நமது பண்டைய இந்தியாவின் நாளந்தா மற்றும் தட்ஷசீலா பல்கலைக்கழகங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியை நோக்கி முன்னேறும் ஒரு தேசத்தின் கல்வித் தரம் கேள்விக்குளாகியுள்ளது. இவ்வளவு குறைபாடுகளை கொண்ட கல்வித் துறை தேசத்தின் வளர்ச்சியை மிக அதிக அளவில் பாதிக்கும். ஒரு நாட்டின் மாணவர்கள், கல்வி முறை மீது நம்பிக்கை இழந்து வருவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.