Skip to main content

பக்தர்களின்றி நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

The world famous Madurai Meenakshi Temple wedding held without devotees ..


உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 22ஆம் தேதி பட்டாபிஷேகம், 23ஆம் தேதி திக் விஜயம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், 10ஆம் நாளான இன்று (24/04/2021) விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா காலை 8.45 மணிக்கு நடைபெற்றது. 

 

வரலாற்றில் 2வது முறையாக கரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கடந்த ஆண்டும் கரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 4 சிவாச்சாரியர்கள் மட்டுமே கலந்துகொண்டு இத்திருக்கல்யாணத்தை நடத்தினர். இருப்பினும் கோவில் இணையதளம், மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தின் மூலம் திருக்கல்யாண நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்து, பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே காண ஏற்பாடு செய்யப்பட்டது.

 

பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தில் எழுந்தருளினர். திருக்கல்யாண மேடையானது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணப்பெண் மீனாட்சியம்மன் முத்துக்கொண்டை போட்டும், வைரக்கிரீடம் சாத்தப்பட்டும், மாணிக்க மூக்குத்தி அணிவிக்கப்படும், தங்கக்காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டும் மணக்கோலத்தில் காட்சி தர, விக்னேஷ்வர பூஜையுடன் திருமண விழா துவங்கி பஞ்ச காவ்யம், சுவாமி அம்பாள் காப்பு கட்டுதல், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து,  வைரக்கல் பதித்த தங்கத் திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்ட பின்னர் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களும், மேள வாத்தியங்களும் இசைக்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம்  நடைபெற்றது.  

 

The world famous Madurai Meenakshi Temple wedding held without devotees ..

 

பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், கோவிலுக்கு வெளிப்புறம் புது மண்டபம் முன்பாக நூற்றுக்கணக்கான பெண்கள் புதிய தாலிக் கயிற்றில் திருமாங்கல்யத்தை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெறுவதால் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் பங்கேற்கவில்லை. திருக்கல்யாணம் முடிந்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில், திருமணக் கோலத்தில் எழுந்தருளும் அம்மன் சுவாமியைக் காண  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 

திருக்கல்யாணதையொட்டி இன்று காலை 6 மணி முதல் 9.30 மணி வரை வழக்கமான தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரையிலான தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவிலுக்கு அருகிலேயே பக்தர்கள், மீனாட்சி அம்மனை நினைத்து தங்களது திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “விமரிசையாக சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று திருமாங்கல்ய கயிறு மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா காரணமாக அனுமதி இல்லாததால், வெளியிலேயே நின்று மாற்றுகிறோம். இந்த நிகழ்வு மனதிற்கு கவலை அளிக்கிறது. திருக்கல்யாணத்தின் சமயத்தில் பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் இங்கு வந்து கயிறு மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு அருகில் இருப்பவர் மட்டுமே வந்துள்ளோம். அதனால் கூட்டம் குறைவாக உள்ளது.” என்றனர்.