'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும், இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதிலிருந்து, "வாழ்க்கை என்பது ஒன்றடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாவது அல்ல. நிலத்தில் விளைந்தவைகளை தின்று, திரிந்து கதை முடிப்பதல்ல. உண்ட உணவின் கொழுப்புகளைப் பிறரோடு கூடித் தணித்துக் கொள்ள வேண்டும் என்கின்ற தன்னிச்சையின் பார்பட்டது அல்ல. வாழ்க்கை என்பது வாழ்வாங்கு வாழ்வதென்று, மண் செழிக்க மழை பொழிவது போல மனிதன் மனம் செழிக்கப் பாடிய வள்ளுவன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையறை செய்து வைத்தார்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்று வகுத்துக் கொண்டு, அப்படி வாழ்ந்தவர்கள் தான் அருளாளர்கள். அவர்கள் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லை. இறைவன் மீது வைத்திருந்த ஈடில்லாத பக்தி நம்மை கரை சேர்க்கும் என்றவர்கள். மனப்பூர்வமாக நம்பினார்கள். அதற்காக, அடக்குமுறை சட்டத்தை ருசிப் பார்த்தார்கள். ஆபத்துகளின் மடியில் உட்கார்ந்த பொழுதும் அச்சப்படாமல் இருந்தார்கள். எதையும் எதிர்கொள்வதற்கான சித்தமிருந்தார்கள். இதிலிருந்து உங்களுக்கும், எனக்கும் என்ன தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், எது வந்தாலும் தாங்கிக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை அருளாளர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
சமயக்குறவர்களில் எப்பொழுதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு மகத்தானவர் திருநாவுக்கரசர் என்கிற அப்பர். இன்றைக்கு தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் உழவாரப் பணியை தமிழக அரசு செய்வதற்கு முன் வந்திருக்கிறது. இந்த உழவாரப் பணி என்பது வேறொன்றும் இல்லை. கோவில்களிலே பாசி படர்ந்திருந்தால்; கோவில்களின் இண்டு இடுக்குகளிலே செடியும், கொடியும் முளைத்திருந்தால்; கோவில்களிலே அழுக்கு, சகதி இருந்தால்; போவதும், வழிபடுவதுமாக வரக் கூடிய பக்தர்கள் அதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அசிங்கமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வருவார்களே தவிர அந்த அசிங்கத்தைப் போக்குவதற்கு ஒரு துரும்பைத் தூக்கிப் போடுவதில்லை.
'Clean India' என்று சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய திட்டத்தை அறிவித்து இன்றைக்கு இந்தியா முழுவதும் தூய்மைப்பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், திருக்கோயில்களில் வாங்கிய பிரசாதத்தை வாயிலே போட்டுக் கொண்டு தூணிலே துடைத்து விடுகிறார்கள். கோயில்களில் அழுக்கு படிந்திருக்கிறது. கோயில்களின் மதிர் சுவர்களில் செடியும், கொடியும் படர்ந்திருக்கிறது. இது இன்றைக்கு தானா என்றால், இன்றைக்கு மட்டும் இல்லை. அன்றைக்கும் இருந்தது. அப்போது தான், வயதிலே பெரியவர் அவர். ஏறக்குறைய 80 வயது தாண்டிய நிலையில் கூட கையிலே கருவிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கோயிலாக சென்று செடிகளை அகற்றினார், கொடிகளை அகற்றினார், பாசி படர்ந்திருந்த இடத்தில் பாசியை சுத்தப்படுத்தினார், தடாகத்தைச் சுத்தப்படுத்தினார். அந்த கோயில் முழுவதும் தானே ஒருவனாக நின்று திருக்கோயிலைச் சுத்தம் செய்யக் கூடிய தூய்மைப்பணியை ஆறாவது நூற்றாண்டில் அன்றொரு நாள் அவர் மேற்கொண்டார். அவருடைய பெயர் திருநாவுக்கரசர்.
இந்த திருநாவுக்கரசர் இந்த பணியை மேற்கொண்டதால் தான் அவருக்கு அப்பர் என்று பெயர் வந்ததா என்பது வேறு. ஆனால் அப்பர் என்கிற உயர்வுக்கு அவர் பேசப்பட வேண்டிய காரணம், அவர் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டார். ஆசாபாசங்களுக்கு அடிபணியாமல், ஆதிக்கத்தைக் கண்டு கலங்காமல், எதைப் பற்றிய மனக்கிரேசமும் இல்லாமல், எது வந்தாலும் எதிர்கொள்ளக் கூடிய துணிச்சலோடு இறைவன் மீது வைத்திருந்த ஈடு இல்லாத நம்பிக்கை தன்னை காப்பாற்றும் என்று சொல்லிக் கொண்டு இந்த உழவாரப் பணியை அவர் நாளும் செய்து வந்தார். அன்றைக்கு அவர் செய்த உழவாரப் பணியை மீண்டும் தமிழ்நாட்டில் செய்வதற்கு இன்றைக்கு தமிழக அரசு முன்வந்திருக்கிறது என்பது ஒரு செய்திதான்.
ஆகவே, கோயிலானாலும் வீடானாலும் சுற்றுப்புறங்களானாலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று இன்றைக்கு வந்திருக்கின்ற விழிப்புணர்ச்சியை ஆறாவது நூற்றாண்டில் தொடங்கி வைத்தவர் அப்பர் சுவாமிகள்" எனத் தெரிவித்தார்.