Skip to main content

நேட்டோ விவகாரம்: சுமூகத் தீர்வை நோக்கி நகர்த்துமா உக்ரைனின் புதிய முடிவு? 

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

Zelensky gives up on joining NATO

 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் முதன்மையானது நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கையை உக்ரைன் ஏற்க மறுத்ததே. இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

தனியார் ஊடகத்துடனான அந்தப் பேட்டியில், "உக்ரைனை நேட்டோவில் இணைக்க அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை. ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டு உக்ரைனை தங்களுடன் சேர்த்துக்கொள்ள நேட்டோ அஞ்சுகிறது. எதையும் காலில் விழுந்து கெஞ்சிப்பெறும் நாடாக உக்ரைன் இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார். 

 

மேலும், அந்தப் பேட்டியில், உக்ரைனின் அங்கமாக இருந்து சுதந்திரமான பகுதிகளாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

 

ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையான நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்ற கோரிக்கையை ஏற்கும் வகையிலான முடிவுக்கு உக்ரைன் வந்துள்ளதால், ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் விரைவில் சுமூகத் தீர்வு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்