நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பயன்பாடுகள் மனிதர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அதிலும், குழந்தைகளின் கையில் மொபைல் போன்களை கொடுத்து சாப்பிட வைக்கும் நிலைமை பெற்றோருக்கு தற்போது உருவாகியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ள சமூக ஊடகத்தில் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ, அதே அளவிற்குத் தீமையும் இருக்கிறது.
இந்த நிலையில், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அரசு சமீபத்தில் அதிரடி முடிவு ஒன்று எடுத்திருந்தது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆஸ்திரேலியாவில் உள்ள 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் பிரதமர் கூறியிருந்தார். அதன்படி, 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை செய்யும் வகையில் இணைய கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய மசோதா ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவில், 16 வயதுக்குட்பட்டவர்களூக்கு சமூக ஊடகங்களை அனுமதிக்கும் எக்ஸ், டிக் டாக், ஃபேஸ்புக், ஸ்நாப்சாட் உள்ளிட்ட தளங்களுக்கு 150 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் அபராதம் விதிக்கவுள்ளதாக வலியுறுத்தப்பட்டது. இந்த மசோதா மீது கடந்த இரண்டு நாட்களாக விவாதம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த மசோதா ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.