ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் அதானியின் சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கான தொடக்க பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
10,000 பேர் வேலைசெய்யக்கூடிய அளவில் உலகில் மிகப்பெரிய சுரங்கமாக இதனை உருவாக்க திட்டமிட்டு ஆஸ்திரேலியா அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள் காரணமாக பணிகளை தொடங்க ஆஸ்திரேலியா அரசு தடை விதித்தது.
ஆனால், இன்று (வியாழக்கிழமை) அதானி குழுமத்தின் தொடர் முயற்சிகளை அடுத்து நிலக்கரி எடுப்பதற்கான அனுமதியை குயின்ஸ்லாந்து மாகாண அரசு வழங்கயுள்ளது. ஆனால் 1000 பேர் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமத்தின் இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை என இது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து குயின்ஸ்லாந்தில் நிலக்கரி எடுக்க காத்திருக்கும் மேலும் 6 நிலக்கரி சுரங்க நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி வழங்கிவிடுமோ என அப்பகுதி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆஸ்திரேலிய சுற்றுசூழல் வீணாக போனாலும், அதானிக்கு இது மிகப்பெரிய லாபமே எனவும் கூறி வருகின்றனர்.