ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா நாட்டில் வெயிலின் தாக்கத்தால் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஐநா அவசர கால மீட்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் வெயில் காலம் முடிவதற்குள் பசியால் சுமார் 20 மக்கள் பலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐநா மன்றம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் கால்நடைகளும், பயிர்களும் கூட அழிந்து வரும் சூழலில், மீட்புப் பணிக்கே சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்கிறது ஐநா மன்றம். மக்களின் உணவு மற்றும் தண்ணீருக்காக மட்டும் சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா பகுதிகளுக்கு ஐநா சுமார் 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இருப்பினும் பொருளாதார உதவிகள் கிடைக்கத் தாமதமானால் கூட மக்களின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் ஐநா அச்சம் தெரிவித்துள்ளது.
சோமாலியா நாட்டில் ஒரு பக்கம் வறட்சி மறுபக்கம் தீவிரவாத குழுக்கள் போன்றவற்றால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் கடுமையான நோய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. சோமாலியா நாட்டிற்கு உதவிகளை செய்ய உலக நாடுகள் முன் வர வேண்டும் என ஐநா மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதே போல் சாதாரண மக்களும் ஐநா மன்றம் மூலம் சோமாலியா நாட்டு மக்களுக்கு உதவலாம் என அறிவித்துள்ளது.