செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் டிக்டாக்கை வாங்கவில்லை என்றால், அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
சீன செயலியான டிக்டாக் பயனர்களின் தகவல்களை சீனாவிற்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்த செயலி தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலியை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனிடையே, அமெரிக்காவின் இந்த முடிவால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய டிக்டாக் நிறுவனம் முடிவெடுத்தது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நிறுவனங்களுக்கும் இடையே நடந்துவரும் சூழலில், செப்டம்பர் 15க்குள் இதற்கான பேச்சுவார்த்தையை முடிக்க திட்டமிட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் டிக்டாக்கை வாங்கவில்லை என்றால், அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.