ஜூன் 15 அன்று சேவை நிறுத்தம் செய்யப்பட்ட இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசருக்கு கல்லறை எழுப்பியுள்ளார் தென் கொரியாவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.
கடந்த 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், அறிமுகப்படுத்தப்பட்ட சில காலங்களிலேயே உலகின் மிகப்பிரபலமான மற்றும் அதிகம் பயன்படுத்தக்கூடிய பிரவுசராக மாறியது. 2000 -த்திற்கு பிறகு மென்பொருள் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சி பல புதிய பிரவுசர்களின் அறிமுகத்திற்கு வழிவகுத்தது. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விடப் பாதுகாப்பானதும், வேகமானதுமான பல பிரவுசர்கள் கணினிகளை ஆக்கிரமித்தன. இதன் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளில் இதன் பயன்பாடு மெல்லக் குறையத்தொடங்கியது. மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனமே எட்ஜ் பிரவுசரை அறிமுகப்படுத்தியது.
இப்படிப் பல காரணங்களால், 25 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவந்த இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசரின் சேவை ஜூன் 15 ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தென் கொரியாவின் தெற்கு நகரமான கியோங்ஜு-யை சேர்ந்த பொறியாளர் கியோங் ஜங் என்பவர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை ஒன்றை அமைத்துள்ளார். அதில் "மற்ற பிரவுசர்களை பதிவிறக்குவதற்கு இது ஒரு நல்ல கருவியாக இருந்தது" என எழுதப்பட்டுள்ளது. இந்த கல்லறையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.