சீனாவில் முதன்முதலில் ஆரம்பித்து உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்று, இன்றுவரை உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனாலும், இப்போது பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
எனவே, கரோனா தொற்றிலிருந்து விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு, அதிர்ச்சியளிப்பது போல், அடுத்த சில மாதங்களுக்கு கரோனா தொற்று மோசமாக இருக்கக் கூடும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "துரதிர்ஷ்டவசமாக, அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கரோனா தொற்று மோசமானதாக இருக்கலாம். சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம், அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறுகிறது. நாம், முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற விதிமுறைகளைப் பின்பற்றினால், அந்த இறப்புகளில் பெரும் சதவீதத்தைத் தவிர்க்க முடியும்" எனக் கூறியுள்ளார்.