அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோது அவருக்கு, கடுமையான அலர்ஜி அறிகுறிகள் தோன்றின. அதற்கு விளக்கமளித்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், "அலர்ஜி பாதிப்பு உள்ளவர்களும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்றும், ஏற்கனவே வேறு தடுப்பூசியால் அலர்ஜிக்கு ஆளானவர்கள் பைசர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக்கூடாது" எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில், அமெரிக்காவில் மேலும் நால்வருக்கு, தடுப்பூசி செலுத்தியவுடன் கடுமையான அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இந்த அலர்ஜி அறிகுறிகள் பற்றி ஆய்வினைத் தொடங்கியுள்ளது. மேலும், பைசர் தடுப்பூசியில் உள்ள பாலி எத்திலீன் கிளைகோல் என்ற ரசாயனம், இந்த அலர்ஜி விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.