இரும்பு உற்பத்தியில் இதுவரை உலகளவில் இரண்டாவது இடத்தில் இருந்துவந்த ஜப்பானை இந்த முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது இந்தியா. சீனா எப்போதும்போல் முதல் இடத்திலேயே உள்ளது.
உலக இரும்பு வர்த்தக அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனா இந்த ஆண்டு (2018) 928.3 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த வருடத்தினுடன் ஒப்பிடும்போது 6.6% அதிகம் என்றும் அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு சீனாவின் இரும்பு உற்பத்தி 870.9 மில்லியன் டன் என இருந்தது. இதன் மூலம் சீனாவின் சந்தை மதிப்பு 50.3% இருந்து 51.3%- ஆக இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
இந்தியா 106.5 மில்லியன் டன் உற்பத்தியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2017-ல் 101.5 மில்லியன் டன் உற்பத்தி செய்திருந்த இந்தியா இந்த முறை 4.9% அதன் உற்பத்தியில் அதிகரித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் கடந்த ஆண்டைவிட 0.3% குறைந்து 104.3 மில்லியன் டன்களை உற்பத்தி செய்து மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. இதன் மூலம் உலகளவில் அதிக இரும்பு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகளவில் மொத்த இரும்பு உற்பத்தியில் 2017-ல் 1,729.8 மில்லியன் டன்னில் இருந்து 4.6% உயர்ந்து 1,808.6%-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.