சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கையும், அந்தநாட்டின் வடக்குப்பகுதியையும் கடுமையான புழுதிப்புயல் ஒன்று தாக்கியுள்ளது. சீனாவில் வசந்த காலத்தின்போது அங்கு புழுதிப்புயல் தாக்குவது வழக்கம். இந்த காலகட்டத்தில் சீனாவின் மேற்குப் பகுதியிலிருக்கும் பாலைவனத்திலிருந்து, கிழக்குத் திசை நோக்கி மணல் பறக்கும். இதன் தாக்கம் வடக்கு ஜப்பான் வரை இருக்கும்.
இருப்பினும் இந்தமுறை தாக்கிய புழுதிப்புயல், கடந்த 10 ஆண்டுகளில் மோசமானதாக அமைந்துள்ளது. இதனால், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும், சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் காற்று மாசு ஏற்பட்டு, அப்பகுதிகள் முழுவதும் மஞ்சளாய் மாறியுள்ளன. இதனால், அங்கு போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூச்சு சம்மந்தமான வியாதிகள் உள்ளவர்கள், வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளிலும் திறந்தவெளி விளையாட்டுகளை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புழுதிப்புயலால் பலர் வீட்டிற்குள்ளயே முடங்கியுள்ளனர்.