உலகிலேயே முதன்முறையாக மனித மூளையில் உயிருடன் நெளிந்து கொண்டிருந்த புழு கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு நியூ சவுத் வேல்ஸை சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் மூன்று வாரங்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ஜனவரி 2021ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வறட்டு இருமல் மற்றும் இரவு நேரத்தில் அதிகப்படியான வியர்வை இருந்தது. இரண்டு ஆண்டுகளாக நிமோனியா மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகளில் அப்பெண் ஈடுபட்டுள்ளார். 2022-ல் சுமார் மூன்று மாத காலம் அவர் மறதி மற்றும் மோசமான மன அழுத்தத்திற்கும் உள்ளானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எம்ஆர்ஐ ஸ்கேன் ஆய்வு அவருடைய மூளையில் காயம் இருப்பதைக் காட்டியது.
தொடர் சிகிச்சையின் மருத்துவ ஆய்வில் அவருடைய மூளையில் ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற ஒரு வகையான புழு ஒன்று உயிருடன் நெளிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. கீரை பறிக்கும் வேலை செய்து வந்த அந்த பெண்ணின் உடலுக்குள் இந்த ஒட்டுண்ணி புழுவின் முட்டைகள் நுழைந்து மூளைக்குச் சென்றிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது சுமார் 8 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த புழு பெண்ணின் மூளையில் இருந்து உயிருடன் அகற்றப்பட்டுள்ளது.