உடல்நிலை சரியில்லாத தாய் ஒருவரை மகன் உயிருடன் மண்ணில் புதைத்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜிங்பியான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 58 வயதான மா. இவருக்கு 79 வயதில் உடல் நிலை சரியில்லாத அம்மா இருக்கிறார். அவருடைய பெயர் வாங். இவர் கடந்த சில ஆண்டுகளாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்குப் போதுமான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படாததால் அவருடைய பக்கவாத நோய் சரியாகாமல் தொடர்ந்து இருந்து வந்தது. இதனால் தாயை என்ன செய்வது என்று யோசித்து வந்த மாவுக்கு திடீர் என்று ஒரு எண்ணம் தோன்றியது.
அதன்படி தன்னுடைய தாய் வாங்-கை அழைத்துக்கொண்டு யாரும் இல்லாத இடத்திற்குச் சென்ற மா, அங்கு ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியில் போட்டு தன்னுடைய தாயை மூடியுள்ளார். பிறகு எந்தச் சம்பவமும் நடைபெறாதது போல தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் அவருடைய மனைவி அத்தை எங்கே என்று கேட்டதற்கும் அவர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி, காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் மா-விடம் விசாரணை செய்ததில் தன்னுடைய தாயை மண்ணில் புதைத்துவிட்டதாகக் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற காவலர்கள் போனபோது அங்கே சரியாக மூடப்படாத குழியில் இருந்து வாங் முனகிக்கொண்டு இருந்துள்ளார். அவரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் மா-வை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.