Skip to main content

கரோனா நோயாளிகளின் இறப்பை தடுக்குமா? - மூன்று மருந்துகளை ஆராயும் உலக சுகாதார நிறுவனம்!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

world health organization

 

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துவரும் கரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டாலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பிரத்தியேகமான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. வேறு நோய்களுக்கான மருந்துகளே கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

 

இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனம், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் உயிரிழப்பதற்கான சாத்தியத்தைக் குறைக்கும் மருந்துகள் குறித்த ஆராய்ந்துவருகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வில் ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், லோபினாவிர், இன்டர்ஃபெரான் ஆகிய மருந்துகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது அல்லது ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் குறைவானது என தெரியவந்தது.

 

இதனையடுத்து உலக சுகாதார நிறுவனம் தற்போது, ஆர்டிசுனேட், இமாடினிப், இன்ஃப்ளிக்ஸிமாப் ஆகிய மருந்துகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகள் இறப்பதற்கான சாத்தியத்தைக் குறைக்குமா என்ற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. மொத்தம் 52 நாடுகளில் 600 மருத்துவமனைகளில் இந்த ஆய்வு தொடங்கியுள்ளது.

 

ஆர்டிசுனேட் மருந்து மலேரியா சிகிச்சையிலும், இமாடினிப் மருந்து சிலவகை புற்றுநோய்களுக்கான சிகிச்சையிலும், இன்ஃப்ளிக்ஸிமாப் மருந்து நோய்எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்