தென்கொரியா மற்றும் வடகொரியாவின் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த தகவல் தொடர்பு அலுவலகத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்துள்ளது வடகொரியா.
பல ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த இந்த இரு நாடுகளும் கடத்த சில ஆண்டுகளாக நட்பு பாராட்டி வந்தன. இந்நிலையில், அண்மையில் இந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மீண்டும் விரிசல் விழ ஆரம்பித்தது. தங்கள் நாட்டில் இருந்து தப்பிய சிலர் தென்கொரியாவில் இருந்துகொண்டு துண்டுப் பிரசுரங்கள் மூலமாகத் தங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருவதாக வடகொரியா அண்மையில் குற்றம் சாட்டியது. மேலும், கிம் ஜோங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களைப் பறக்கவிடுவதாகவும், வடகொரியாவின் சில ரகசியத் தகவல்கள் தென்கொரியா வாயிலாகக் கசிவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வடகொரியா சுமத்தியது.
மேலும், கடந்த வாரத்தில் தென்கொரியா உடனான உறவில் எழுந்துள்ள சிக்கல் குறித்து வடகொரியா தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டன. இந்நிலையில் இந்த இருநாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்திருந்த பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிகுண்டு வைத்துத் தகர்த்துள்ளது. இத்தகவலை தென் கொரியாவும் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் அதிகரிக்க துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.