இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள சூழலில், இதுகுறித்த கருத்துக்கணிப்பில் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஒருபுறம் கரோனாவால் அந்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள நிலையில், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரான ட்ரம்ப் விரைவில் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம், ஜனநாயக ஆட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடென், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள தனது பிரச்சாரம் எப்போது தொடங்கும் என இன்னும் அறிவிக்கவில்லை. இந்த சூழலில், அதிபர் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கின்னிபியாக் பல்கலைக்கழகம் கருத்துக் கணிப்பு ஒன்றை அண்மையில் நடத்தியது.
தற்போது வெளியாகியுள்ள அந்த கருத்துக் கணிப்பின் முடிவில், ட்ரம்ப்புக்கு ஆதரவாக 41 சதவீத மக்களும், ஜோ பிடெனுக்கு ஆதரவாக 49 சதவீத மக்களும் வாக்களித்துள்ளனர். இதற்கு முந்தைய சில கருத்துக்கணிப்புகளில் ட்ரம்ப் முன்னிலையிலிருந்த சூழலில், கரோனா வைரஸை கையாண்ட விதம், சர்வதேச நாடுகளுடனான உறவுகளைக் கையாண்ட விதம், ஜார்ஜ் ஃபிளாய்ட் சர்ச்சை ஆகியவற்றால் அவரது செல்வாக்கு பெருமளவு சரிந்துள்ளதாகத் தெரிகிறது. அதேபோல ஒபாமாவின் ஆதரவு ஜோ பிடெனுக்குக் கூடுதல் செல்வாக்கைப் பெற்று தந்துள்ளதாகத் தெரிகிறது.