சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் அந்நாட்டு பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து வானிலிருந்து விழும் குண்டுகள் ஏற்படுத்தும் வெடிப்புகளில் உடல் சிதறி ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். இந்தத் தாக்குதல் சமயங்களில் வெள்ளை தலைக்கவசம் அணிந்த ஒரு குழு, சரிந்த கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை முடிந்தவரை உயிருடன் மீட்டுக் கொண்டிருக்கிறது.
ஜேம்ஸ் லி மெஜூரியர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த தன்னார்வலர் அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்த சேவையைச் செய்து வருகிறது. இந்த அமைப்பில் ஏராளமான பெண்கள் உட்பட 3ஆயிரம் தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இந்த அமைப்பில் உள்ளவர்கள் பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவர்.
சிரியாவில் பொதுமக்களின் மீது எப்போதெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் தலையில் வெள்ளைக் கவசம் அணிந்துகொண்டு இந்தக் குழுவினர் மீட்புப் பணிகளுக்குக் கிளம்பிவிடுகின்றனர். மீட்புப் பணிகள் மட்டுமல்லாது மற்ற நேரங்களில் சிரிய மக்களுக்கு இவர்கள் தாக்குதல்கலில் இருந்து காத்துக்கொள்ளும் முறைகளையும் கற்றுத் தருகின்றனர்.
When the bombs rain down, The #WhiteHelmets rush in but few know about the courageous women in @SyriaCivilDefe saving Syrian lives every day. pic.twitter.com/4tnsd05Xl2
— The White Helmets (@SyriaCivilDef) February 27, 2018
மீட்புப் பணியில் ஈடுபடும் இந்த வெள்ளை ஹெல்மெட் படையினரும் பல பாதிப்புகளைச் சந்திக்கின்றனர். தாக்குதலில் ஈடுபடும் சிரிய வீரர்கள் இவர்களைக் குறிவைக்கவும் தவறுவதில்லை. இருந்தாலும், எப்படியேனும் நம்மால் முடிந்தவரை அப்பாவி மக்களைக் காப்பாற்றி விடவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த வெள்ளை ஹெல்மெட் குழுவினர் உயிரைத் துச்சமென எண்ணி மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, இதுவரை 99,200 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.