காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவர்கள், பல்துறை அறிஞர்கள், இளைஞர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க வாழ் இந்திய மக்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவில் நமக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சனையை பற்றி நான் உங்களுக்கு கூறுகிறேன். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் திறமையற்றவர்கள். நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அவர்கள் கடந்த காலத்தை பற்றியே பேசுவார்கள். பாஜகவிடம் ரயில் விபத்தை பற்றி கேட்டுப் பாருங்கள், அவர்கள் உடனடியாக காங்கிரஸ் இதனை செய்யவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் அதை செய்யவில்லை என்றுதான் குறை சொல்வார்கள்.
அறிவியல் பாடப் பகுதியில் இருந்து தனிம வரிசை அட்டவணையை நீக்கியது ஏன் என்று பாஜகவிடம் கேட்டுப் பாருங்கள். அதற்கு அவர்கள் 60 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று அவர்கள் சொல்லுவார்கள். பின்னால் திரும்பி பார்ப்பது மட்டும் தான் அவர்களது உடனடி பதிலாக இருக்கும். யாராலும் பின் கண்ணாடியை பார்த்தபடி காரை ஓட்ட முடியாது. அது அடுத்தடுத்த விபத்துக்கு தான் வழிவகுக்கும். இதுதான் பிரதமர் மோடியின் வியக்கத்தக்க நடவடிக்கையாகும்.
மோடி, இந்தியா என்ற காரை ஓட்ட முயற்சிக்கிறார். ஆனால் பின்பக்க கண்ணாடியை மட்டும் பார்க்கிறார். இந்த கார் ஏன் விபத்துக்குள்ளாகிறது. கார் ஏன் முன்னோக்கி நகரவில்லை என்பது பற்றி அவருக்கு புரியவில்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். என அனைவரிடமும் இதே எண்ணம் தான். நீங்கள் அவர்களை கவனியுங்கள் அவர்களது அமைச்சர்களையும் கவனியுங்கள். பிரதமரை கவனியுங்கள். அவர்கள் எதிர்காலத்தை பற்றி பேசுவதை காண முடியாது. அவர்கள் கடந்த காலத்தில் யாரையாவது குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பார்கள்" என்று பேசினார்.