இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு பேரும் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீதும் தொடர் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதலையும் தீவிரப்படுத்தியே வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலால், காசா பகுதியில் இருந்த சுமார் 44,056 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,04,268 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும், போர் குற்றங்கள் நடந்ததாகவும் பல நாடுகள் விமர்சனம் செய்து வந்தன. இது தொடர்பான வழக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.