இஸ்ரேல் நாட்டில் பைசர் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுவரும் நிலையில், அந்த நாட்டில் கடந்த வருடம் டிசம்பர் முதல் இந்த வருடம் மார்ச் மாதம்வரை பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 5 மில்லியன் பேரில், 275 பேருக்கு இதயத்தில் வீக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்க இஸ்ரேலிய சுகாதாரத்துறை மூன்று நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது. இந்தநிலையில், இந்தக் குழுவின் ஆய்வு முடிவுகளை இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
நிபுணர்கள் நடத்திய ஆய்வில், பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்வதற்கும், 16 முதல் 30 வயதான இளைஞர்களுக்கு இதயத்தில் வீக்கம் ஏற்படுவதற்கும் தொடர்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளதாக இஸ்ரேலிய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும் 16 முதல் 19 வயதான இளைஞர்களிடையே இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுவதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய சுகாதாரத்துறை, 95 சதவீதம் பேருக்கு மிதமான அளவிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும், இந்த பாதிப்புக்குள்ளான பெரும்பாலானவர்கள் நான்கு நாட்களுக்குள் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் இவ்வருட தொடக்கம் முதல் 16 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகவிருந்த நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக இஸ்ரேல் சுகாதாரத்துறை, இதயத்தில் வீக்கம் ஏற்படும் விவகாரத்தை நிபுணர் குழு ஆராய்ந்து வருவதாகவும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து அந்தக் குழு பரிந்துரைக்கும் என கூறியுள்ளது. இதனால் அந்த நாட்டில் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவது தாமதமாகலாம் என கருதப்படுகிறது.
இதற்கிடையே பைசர் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த நிறுவனம், "வழக்கமாகவே மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவில் இந்தப் பாதிப்பு ஏற்படும். அந்தக் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக பொதுமக்களிடம் இந்தப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நாங்கள் கண்டறியவில்லை. தடுப்பூசிக்கும், இதய வீக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறெதென ஆய்வில் உறுதிப்படுத்தப்படவில்லை. தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இதுதொடர்பான தரவுகளை ஆய்வு செய்ய பைசர் இஸ்ரேலிய சுகாதார அமைச்சின் தடுப்பூசி பாதுகாப்புத்துறையுடன் தவறாமல் சந்திக்கிறது" என கூறியுள்ளது.