உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, கரோனா வைரஸ் குறித்து சீனாவிற்குச் சென்று ஆய்வு நடத்த, உலக சுகாதார நிறுவனம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.
சீனாவில் ஆய்வு நடத்திய நிபுணர் குழு, சீன ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை எனத் தெரிவித்தது. மேலும், வௌவாலிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் எனத் தெரிவித்தது. இதுதொடர்பான ஆய்வறிக்கை கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியானது. அதில், கரோனா வைரஸ், முதலில் வௌவாலிலிருந்து விலங்குகளுக்குப் பரவி, பின்னர் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்ததோடு, ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு மிகவும் சாத்தியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள், நிபுணர் குழு ஆய்வு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டதாகவும், நிபுணர் குழுவிற்கு முழுமையான, உண்மையான தரவுகள் வழங்கப்படவில்லை எனவும் கூறி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.
அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டு ஊடகம் ஒன்று, கடந்த 2015ஆம் ஆண்டில் சீன விஞ்ஞானிகள், நிபுணர்கள் ஆகியோர் எழுதியதாக ஆவணம் ஒன்றை வெளியிட்டது. அதில் 2015 ஆம் ஆண்டே கரோனா வைரஸ்களை ஆயுதமாக மாற்றுவது குறித்து சீன விஞ்ஞானிகள் பேசியிருப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, அமெரிக்க உளவுத்துறையின் வெளியிடப்படாத அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டி, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, அதாவது சீனா கரோனா பரவல் குறித்து வெளியுலகிற்கு அறிவிக்கும் முன்பே, வுஹான் வைராலஜி மையத்தைச் சேர்ந்த மூவர் கரோனாவுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட காலகட்டம், மருத்துவமனைக்குச் சென்று வந்தது உள்ளிட்ட தகவல்கள், கரோனா பரவல் குறித்த விரிவான விசாரணைக்கான கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் கரோனா பரவல் குறித்த அடுத்தகட்ட விசாரணை குறித்து முடிவெடுக்க விரைவில் கூடவுள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சீனாவோ இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.