இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்றுவருகிறது. கிழக்கு ஜெருசலேம் பகுதி யாருக்கு சொந்தம் என்பதே இரு தரப்பு மோதலின் மையமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூதர்கள் உரிமை கொண்டாடும் நிலத்தில் வசித்துவரும் பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. இதன்தொடர்ச்சியாக, ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
இதையடுத்து, பாலஸ்தீனத்தின் காசா முனையை தன்னாட்சி உரிமை பெற்று ஆட்சி செய்துவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பு மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் இருதரப்பிலும் இதுவரை 116 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 109 பேரும், இஸ்ரேலில் இந்தியப் பெண் உட்பட 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இருநாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருவதால், போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டும் பதற்றத்தைத் தணிக்க இயலவில்லை. இந்தநிலையில், ஹமாஸ் போராளிகளுடன் போரிட 9,000 படைவீரர்களை அணிதிரட்ட அனுமதி வழங்கியுள்ளார் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர். மேலும், காசா முனை எல்லையில் இஸ்ரேல் தனது படைகளைக் குவித்துவருகிறது. ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா முனைக்குள் தரைவழியாக படையெடுப்பை நடத்தவே இஸ்ரேல் படைக்குவிப்பை மேற்கொள்வதாக கருதப்படுகிறது. இதனால் உச்சக்கட்ட போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தற்போது நடைபெறும் மோதலைத் தடுக்கும் விதமாக எகிப்து மத்தியஸ்த குழு, இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது. ஆனால், தற்போதுவரை உச்சகட்ட போர்ப் பதற்றமே நிலவுகிறது.