‘பியுவ் டை பை’ என்னும் யூ-ட்யூப் சேனலுக்கும் இந்தியாவைச் சேர்ந்த மியூஸிக் லேபல் ட்-சீரிஸ் யூ-ட்யூப் சேனலுக்கும் யூ-ட்யூபில் ஒரு போரே நடந்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே.
இந்த இரண்டு சேனல்களும்தான் யூ-ட்யூபில் அதிக சப்ஸ்க்ரைபர்கள் வைத்திருக்கும் சேனல்கள். தற்போது யார் 10 கோடி சப்ஸ்க்ரைபர்கள் பெற்று யூ-ட்யூபில் முதலிடம் பிடிப்பார்கள் என்று இரு சேனலுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பியுவ் டை பை என்னும் சேனலை முந்தியது டி- சிரீஸ். இதன் பின்னர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்வது போன்று இந்தியாவை விமர்சித்து ‘பியுவ் டை பை’ வெளியிட்ட ரேப் பாடல் தற்போது வைரலாகியது. இதனால் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது இந்த பியுவ் டை பை சேனல். அதுவும் இவ்விரு சேனலுக்கும் 2 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வித்தியாசம் தற்போதைய நிலவரப்படி உள்ளது.
‘பியுவ் டை பை’என்னும் அந்த சேனலை சுவீடன் நாட்டைச் சேர்ந்த 29 வயது இளைஞரான ஃபெலிக்ஸ் அர்விட் நடத்தி வருகிறார். இவருடைய சேனலின் சிறப்பம்சம் என்ன என்றால் இவர் மட்டும்தான் இந்த சேனலையே நடத்துகிறார். காமெடியும் காண்டிரவர்சியுமே இவருடைய சேனல் மிக பிரபலமாகுவதற்கு காரணமாக இருந்தது. யூ-ட்யூபில் அதிகமாக சம்பாதித்தவர்களில் இவரும் ஒருவர். யூ-ட்யூபினால் கிடைத்த பிரபலத்தின் மூலம் பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். உலகம் முழுவதும் இவருக்கு பல ரசிகர்களும் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 30ஆம் தேதி இவர் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு டி-சீரிஸை வாழ்த்துவது போன்று ராப் பாடல் ஒன்றை வெளியிட்டார். அந்த ராப் பாடலில் இந்தியாவில் உள்ள வறுமை, ஜாதி பாகுபாடு ஆகியவற்றை எல்லாம் குறிப்பிட்டு இந்தியாவை விமர்சித்து பாடியுள்ளார். மேலும் இவருடைய போட்டியாளராக இருக்கும் டி-சீரிஸின் தலைவர் பூஷன் குமாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருக்கிறார். இதனால் பூஷன் குமார் பியுவ் டை பை மீது மானநஷ்ட வழக்கு போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
‘பியுவ் டை பை’ சேனலில் ஏற்கனவே இந்தியாவை மிகவும் மோசமாக விமர்சித்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறார். இந்த போட்டியில் டி-சீரிஸ் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பூஷன் குமார் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான ஷாரூக் கான், சல்மான் கான் ஆகியோரிடம் உதவி கேட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.