பெண்களைப் பசுக்கள் போல் சித்தரித்து விளம்பரம் செய்த பிரபல நிறுவனத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
தென்கொரியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனம் சியோல் மில்க். இந்த நிறுவனம் அடிக்கடி விளம்பரம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை செய்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக நடக்கக்கூடிய ஒன்று. அந்த வகையில், நிறுவனத்தின் தூய்மையைப் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுகிறோம் என்று அறிவித்துவிட்டு, இதுதொடர்பாக ஒரு விளம்பரத்தையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தைப் பார்த்த அனைவரும் இது மிகவும் முட்டாள்தனமான முடிவு என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
அந்தக் குறிப்பிட்ட விளம்பரத்தில், ஒருவர் புகைப்படம் எடுக்கும் பொருட்டு கேமராவுடன் காட்டிற்கு வருகிறார். அங்கே இளம் பெண்கள் தூய்மையான தண்ணீரை அருந்தி, யோகாசனம் செய்வது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன. புகைப்படம் எடுப்பவர் அங்கிருந்த மரக்கட்டை ஒன்றை மிதித்துவிட, அந்த சத்தம் கேட்ட இளம்பெண்கள் பசுக்களாக மாறிவிடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் என்ன கூற வருகிறீர்கள் என்று பலரும் அந்த விளம்பரத்திற்கு கீழே கமெண்டில் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இந்த சர்ச்சையால் அந்த வீடியோ நீக்கும் முடிவுக்கு அந்த நிறுவனம் வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.