
அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக சவுதி அரேபியாவில் இன்று ஒரு நாள் நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் 22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டியில் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. போட்டியின் 48 வது நிமிடத்தில் சவுதி அரேபிய அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர்.
முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த அர்ஜெண்டினா அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் சவுதி அரேபியாவை வீழ்த்த முடியவில்லை. முடிவில் 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், சவுதி அரேபிய அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.