கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.
64 உலக நாடுகளுக்கு மொத்தமாக 174 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேபோல ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்கா நிதியுதவியை அறிவித்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 1591 என அதிகரித்துள்ளது. இந்நிலையில், லாக்டவுன் நேரத்தில் மக்களின் நஷ்டங்களை போக்கும்விதமாக இரண்டு ட்ரில்லியன் டாலர் நிதியை ஒதுக்க அவசர செலவு மசோதாவில் சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.