ஆப்கானிஸ்தானில் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அந்தநாட்டில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. தாலிபன்கள் அந்தநாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். நாளுக்கு நாள் ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபன்களுக்குமான மோதல் தீவிரமடைந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக அமெரிக்காவும் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனிடையே அண்மையில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இருப்பினும் அமைச்சர் அப்போது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார். ஆனால் அதேநேரத்தில் இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு அமைச்சர் மீதான தாக்குதல் குறித்து தாலிபன்கள், இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தவும், குண்டு வீசவும் உத்தரவிடும் காபூல் நிர்வாக தலைவர்கள் மீதான பழிவாங்கும் தாக்குதலின் தொடக்கம் என கூறினர். அதன்பிறகு ஆப்கானிஸ்தானின் அரசு ஊடக மையத் தலைவரை தாலிபன்கள் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக அரசு வெளியிடும் செய்திகளை அவர் ஊடகங்களுக்கு வழங்கியதால் அவரை கொன்றதாக கூறினர்.
இவ்வாறு தாலிபன்களின் தாக்குதல்களும், அட்டுழியமும் அதிகரித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம், அங்கிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை, வர்த்தகரீதியிலான விமான சேவையை பயன்படுத்தி உடனடியாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு சூழ்நிலை காரணமாகவும், பணியாளர்கள் குறைக்கப்பட்டதன் காரணமாகவும் காபூலில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கே குறைந்த அளவில்தான் உதவ முடிவதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.