ரஷ்யாவிடம் இருந்து முன் எப்போதும் இல்லாத அதிக விலைக்கு சூரியகாந்தி எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சமையலுக்கு சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் பயன்படுத்தப்படும் நிலையில், அது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு வந்தது. தற்போது உக்ரைனில் போர் நடப்பதால், அங்கிருந்து சூரியகாந்தி எண்ணெய்யை வாங்குவது முற்றிலும் நின்று விட்டது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய்யின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து சூரியகாந்தி எண்ணெய்யை வாங்குவதற்காக மிக அதிகத்தொகை கொடுத்து ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் போர் தொடங்கும் முன் ரஷ்யாவிடம் இருந்து ஒரு டன் 1,630 டாலருக்கு வாங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2,150 டாலர் கொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதன்விளைவாக, இந்திய சந்தைகளில் சூரியகாந்தி எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.