உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்காவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் 1,000- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயணிகளை அண்டை நாடுகளின் வழியாக மீட்டு வருகின்றனர் வெளிநாட்டு தூதரகங்கள்.
இந்த நிலையில், இவ்விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது உக்ரைன். இது குறித்து உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த உத்தரவிட சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் மனுத் தாக்கல் செய்துள்ளது. உக்ரைன் மனு மீதான விசாரணை அடுத்த வாரம் தொடங்கும். இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும். உக்ரைனில் இனப்படுகொலை நடப்பதாக போலியாக குற்றம்சாட்டி போருக்கு ரஷ்யா வழிவகுத்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.