'கோல்டன் விசா' எனப்படும் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் விசாவை பெறுவதில் சில புதிய தளர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது அமீரகம்.
அனைத்து துறைகளிலும் பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்களை பெரிதும் சார்ந்து செயல்படும் அமீரகம் அந்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்றும் வகையில், அந்நாட்டில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்கு 'கோல்டன் விசா' எனவும் பத்தாண்டு செல்லுபடியாகும் விசாக்களை வழங்கி வந்தது. இந்நிலையில், தற்போது இந்த விசாவை மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கும் வழங்க அந்நாடு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த கோல்டன் விசாவை இனி, முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் பெறலாம். உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றிலிருந்து பி.எச்.டி பட்டம் பெற்றவர்கள், சான்றளிக்கப்பட்ட மருத்துவர்கள், கணினியியல், மின்னணுவியல், நிரலாக்க மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளை சார்ந்த பொறியாளர்கள், கல்வியில் அதிக தகுதி வாய்ந்த நபர்கள், எமிரேட்ஸ் விஞ்ஞானிகள் கவுன்சில் அமைப்பில் பதிவு செய்த ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இனி இந்த கோல்டன் விசாவை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.