துருக்கியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் செய்தி நிறுவனமான AFP வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் சரியாக 4.17 மணியளவில் ஏற்பட்டதென்றும் இந்த நிலநடுக்கம் துருக்கி - சிரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான லெபனான், சிரியா, ஸைப்ரஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளில் எதிரொலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. பலர் காயமடைந்துள்ளனர். இதனால் 42 முறை மின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிரியாவில் தற்போது வரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் அலெப்போ மற்றும் மத்திய நகரமான ஹமாவில் அதிக அளவில் கட்டடங்கள் இடிந்து விழுந்தது. இந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், “நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார். தற்போது வரை இரு நாடுகளையும் சேர்த்து 234 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.