ஜி-7 நாடுகள் என்பதை மேலும் விரிவுபடுத்தி இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாட்களை இந்த அமைப்பில் இணைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாடு ஜூன் மாத இறுதியில் நடைபெறுவதாக இருந்த சூழலில், அதனை, செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
மேலும், இந்த அமைப்பு குறித்து பேசிய ட்ரம்ப், ஜி7 கூட்டமைப்பு ஒரு காலாவதியான நிலையில் இருப்பதாகவும், இதனைச் சரிசெய்ய ஜி10 அல்லது ஜி11 என்று விரிவுப்படுத்தி, இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளை இந்த அமைப்பில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு மத்தியில், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்த நிலையில், ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தக் கூட்டமைப்பில் ரஷ்யாவை இணைக்க முயற்சிகள் நடந்து அது தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.