
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனையிலே தங்கி உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் பிரிவில் உள்ள வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அங்கு ஒப்பந்த அடைப்படையில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களை வைத்து அங்கு பணிபுரியும் அனிதா மற்றும் ரீனா ஆகிய செவிலியர்கள் பணியின் போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருவதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மேலும் பெண்கள் பிரிவு வார்டு மிகவும் மோசமான பழுதடைந்த நிலையில் இருப்பதால் அந்த வார்டு எலிகளின் கூடாரமாக திகழ்ந்து நோயாளிகள் எலிகளின் அச்சுறுத்தலில் உயிரை கையில் பிடித்தவாறு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி நோயாளிகள் ரகசியமாக எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களை வைத்து சிகிச்சை பார்க்கும் அவலங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை சுகாதாரத்துறை அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.